தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது, தந்தையுடன் கருத்து வேறுபாடு என பல்வேறு விஷயங்களில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து தனக்கென்று அரசியல் ஆலோசகர்கள் சிலரை உதயநிதி ஸ்டாலின் பணியில் அமர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக இளைஞர் அணிச்செயலாளர் பொறுப்பை ஏற்றதும் தனது நீண்ட கால நண்பர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட சிலரை தன்னுடன் வைத்துக் கொண்டு அரசியல் களத்தில் செயல்பட்டு வந்தார் உதயநிதி ஸ்டாலின். திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் முதல் அண்மையில் சர்ச்சையான திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் நியமனம் வரை அன்பில் மகேஷ் உள்ளிட்ட தனக்கு நெருக்கமான திமுக நிர்வாகிகள் ஆலோசனை படியே அவர் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து உதயநிதியை இளைஞர் அணி செயல்பாடுகளை மட்டும் பார்த்துக் கொள்ளுமாறும், கட்சி நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியதாக சொல்கிறார்கள். இதனை தொடர்ந்து அன்பில் மகேஷ் போன்றோரின் ஆலோசனைகளை ஏற்கும் முன் தற்போது உதயநிதி ஒன்றுக்கு பலமுறை யோசிப்பதாக சொல்கிறார்கள். அதே சமயம் கலைஞர் இருந்த போது அவருக்கு நெருக்கமாக இருந்து ஆலோசனைகள் வழங்கிய அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, தனது தந்தைக்கு நெருக்கமாக இருக்கும் எ.வ.வேலு, பொன்முடி போன்றோரை போல் தனக்கும் அரசியல் ஆலோசனைகள் வழங்க ஆட்கள் தேவை என்று உதயநிதி கருதுகிறார்.

அப்படித்தான் இதுநாள் வரை அன்பில் மகேஷ் உள்ளிட்ட சிலரை தன்னுடன் வைத்துக் கொண்டு உதயநிதி செயல்பட்டு வந்தார். இவர்கள் தவிர சினிமா இயக்குனர் கரு.பழனியப்பனும் உதயநிதிக்கு அறிக்கைகள் எழுதிக்கொடுப்பது, பேசுவதற்கு பாய்ன்ட்டுகள் எடுத்துக் கொடுப்பது என்று உதவி வந்தார். ஆனால் இந்த டீமால் தனது இமேஜ் சரிந்து கொண்டு போவதை சற்று தாமதமாகவே உதயநிதி புரிந்து கொண்டதாக சொல்கிறார்கள். இதனால் வட இந்திய அரசியல் பாணியில் அரசியல் ஆலோசகர்களை தனக்கு என்று பிரத்யேகமாக நியமிக்க உதயநிதி முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

அதன்படி மூத்த பத்திரிகையாளர் கண்ணனை அண்மையில் தன்னுடைய அரசியல் ஆலோசகராக உதயநிதி நியமித்துள்ளதாக கூறுகிறார்கள். இவர் தவிர மேலும் சிலரை தேசிய அரசியலுக்கு ஒருவர், மாநில அரசியலுக்கு ஒருவர், லோக்கல் அரசியலுக்கு ஒருவர் என அனுபவம் வாய்ந்தவர்களை உதயநிதி தேடி வருவதாகவும் கூறுகிறார்கள். எந்த ஒரு விஷயம் என்றாலும் இவர்களின் ஆலோசனையை பெற்று செயல்படுவது என்று உதயநிதி முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களில் தனது இமேஜை உயர்த்தவும் தனி டீமை பணியில் அமர்த்த உதயநிதி திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

திமுகவிற்கும், ஸ்டாலினுக்கும் இந்த பணியை பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீம் கவனித்து வருகிறது. அதே சமயம் தனக்கு என்று பிரத்யேகமாக செயல்பட ஒரு டீம் தேவை என்று அதற்கான தேடுதலிலும் உதயநிதி ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் ஆலோசனைக்கு என்று மூத்த பத்திரிகையாளரை பணியில் அமர்த்துவது, சமூக வலைதள செயல்பாடுகளை ஒருங்கிணைக்க தனி டீம் உருவாக்க முயற்சிப்பது என உதயநிதி தனி ஆவர்த்தனம் பாடுவது தனக்கு என்று கட்சியில் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கை என்கிறார்கள். ஸ்டாலின் எப்படி தனது தந்தை கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது இளைஞர் அணி என ஒன்றை உருவாக்கி தனி ஆவர்த்தனம் பாடினாரோ, அதே போல் தானும் கட்சியில் தனக்கான அடையாளத் உருவாக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம் உதயநிதி.