உடல் நலக்குறைவால் இன்று மாலை உயிரிழந்த டெல்லி முன்னாள் முதலமைச்சர்  ஷீலா தீட்சித்  மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு, பிரதமர் நரேதிர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த ஷீலா திட்சீத்தின் உடலுக்கு பிரதமர் அமாடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியதாக ஷீலா தீட்சித்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'காங்கிரஸ் கட்சியின் அன்புக்குரிய மகளான ஷீலா தீட்சித் மறைவு செய்தியை அறிந்து  அதிர்ச்சி அடைந்துள்ளேன். தனிப்பட்ட முறையில் என்னுடன் நெருக்கமான நல்லுறவுகளை பேணிவந்த அவரது மறைவு மிகப்பெரிய பேரிழப்பாகும். 

அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், டெல்லி மக்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர்  மம்தா பானர்ஜி உள்ளிட்ட இதர அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், மூன்று முறை டெல்லி முதலமைச்சராகவும்  பணியாற்றியுள்ளார்.அவர்  பதவி வகித்த காலத்தில் தனது நிர்வாகத் திறனால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் என தெரிவித்துள்ளார்.. 

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித் உடலுக்கு முக்கிய பிரமுகர்களும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.