காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியவர்களைப் பிடிக்க சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் குதிரை மேல் ஏறி போலீஸார் துரத்த அது  வடிவேலு பட பாணியில் மீண்டும் கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்து அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவதால் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தைப் போன்று மீண்டும் இளைஞர்கள்  போராட வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலையடுத்து  அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் மெரினாவில் திடீரென திரண்ட இளைஞர்கள் கடல் நீர் அருகே வரிசையாக நின்று பதாகைகள் ஏந்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோஷமிட்டனர். இதையடுத்து கடற்கரை சாலையில்  பணியில் இருந்த போலீஸாருக்கு இந்த தகவல் தெரிந்து வேக வேகமாக போராடும் இளைஞர்களைப் பிடிக்க ஓடி வந்தனர்.

அப்போது சில போலீஸாரால் ஓட முடியவில்லை. போராட்டக்காரர்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அங்கிருந்த வாடகை குதிரைகளின் மீது ஏறி போராட்டக்காரர்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குதிரைக்காரர்களை அழைத்து குதிரை மேல் ஏற்றி கடல் அருகில் வேகமாக கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து குதிரை ஓட்டுபவர்கள் போலீசாரை ஏற்றிக்கொண்டு கடல்  நீரை நோக்கி சென்றனர். ஆனால் குறிப்பிட்ட தூரம் சென்றவுடன்  அந்த குதிரைகள் திரும்பவும் கிளம்பிய இடத்திற்கே மீண்டும் நடக்கத் தொடங்கின.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் குதிரை ஓட்டுபவர்களை திட்டத் தொடங்கினர். அதற்கு அவர்கள் , சார் இது பழக்கப்பட்ட குதிரை, அப்படித்தான் இருக்கும் என்று தங்கள் நிலையை விளக்கினர்.

அடச்சே வடிவேல் பட காமெடி மாதிரி ஆகிவிட்டதே என சிரித்துக் கொண்ட போலீசார், கடல் நீரை நோக்கி ஓடத் தொடங்கினர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பை வரவழைத்தது.