இதெல்லாம் பார்க்கும்போது காவல்துறையின் மெத்தனமே கலவரத்திற்கு காரணம்.. சும்மா கேள்வியால் தெறிக்கவிடும் சசிகலா
காவல்துறையினர் மாணவி தங்கி இருந்த அறையை முறையாக சோதனை செய்தார்களா? மாணவியோடு தங்கி இருந்த சக மாணவிகள், விடுதியில் உள்ளவர்கள் அனைவரையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தார்களா? அவர்களையெல்லாம் பெண் காவல்அதிகாரியை வைத்து விசாரித்தார்களா? என்றும் சரியாக தெரியவில்லை.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி சசிகலா அலறவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீ மதி என்ற 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்ததாக சொல்லப்படும் நிலையில், இன்றோடு எட்டு நாட்களாகிறது. அதன் பிறகு மாணவியின் பெற்றோர் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து இன்று வரை போராடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்கள் கழித்து ஐந்தாம் நாள் அதாவது 17-07-2022 அன்று சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்பு நடைபெற்ற போராட்டம் திடீரென்று கலவரமாக மாறி, வன்முறையில் போய் முடிந்தது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகி, காற்றில் பறந்ததை நம் அனைவராலும் கண்கூடாக பார்க்க முடிந்தது. இந்த வன்முறைக்கு காரணமானவர்கள் என்று ஏராளமானோரை காவல்துறை கைது செய்து வருகிறது. இந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில், இதற்கு சம்பந்தம் இல்லாதவர்களையும் காவல்துறை கைது செய்து இருப்பதாக அந்த பகுதியில் உள்ள ஊர்மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி கலவரம்.. முன்பே எச்சரித்த மாநில உளவுத்துறை.. கோட்டைவிட்ட காவல்துறை.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
இந்த நிகழ்வுகளை எல்லாம் தமிழகத்தில் உள்ள நாம் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இதை பார்த்துக்கொண்டு இருக்கும் பொதுமக்களுக்கு சாதாரணமாக ஏற்படும் ஒரு சில சந்தேகங்கள் போல் நமக்கும் வருகிறது. அதாவது, ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தில், அதிலும் ஆயிரக்கணக்கானோர் படிக்கின்ற பள்ளியில், ஒரு மாணவி திடீரென்று மரணம் அடைகிறார். அது கொலையா? தற்கொலையா? என்று முதலிலேயே யாருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இப்படிப்பட்ட சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தவுடன், பள்ளியைச் சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு உடனே தகவல் தெரிவித்தார்களா? என்பது தெரியவில்லை.
அவ்வாறு தெரிவித்து இருந்தால், காவல்துறை அந்த இடத்திற்கு உடனே வந்து இருக்க வேண்டும். மாணவி மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததாக சொல்லப்படும் இடத்தை காவல்துறையினர் பார்வையிட்டு அந்த இடத்தில் அடையாள குறி ஏதும் வரையப்பட்டதா? வேறு ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான வகையில் தடயங்கள் ஏதும் உள்ளனவா என்ற கோணத்தில் ஆய்வு செய்தனரா? என்பதும் சரியாக தெரியவில்லை. மேலும், காவல்துறையைச் சேர்ந்த மோப்ப நாய்கள் உடனே வரவழைக்கப்பட்டு அந்த இடத்தில் ஏன் எந்த ஆய்வும் செய்யப்படவில்லை? என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.
இதையும் படிங்க;- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இரவு நேரத்திலேயே மூன்றாம் மடியில் இருந்து கீழே விழுந்தாரா?புதிய வீடியோவால் பரபரப்பு
காவல்துறையினர் மாணவி தங்கி இருந்த அறையை முறையாக சோதனை செய்தார்களா? மாணவியோடு தங்கி இருந்த சக மாணவிகள், விடுதியில் உள்ளவர்கள் அனைவரையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தார்களா? அவர்களையெல்லாம் பெண் காவல்அதிகாரியை வைத்து விசாரித்தார்களா? என்றும் சரியாக தெரியவில்லை. அதேபோன்று, பெண் காவலர்கள் சம்பவம் நடந்த முதல் நாளிலிருந்து, மாணவிகளின் விடுதியில் காவலுக்கு இருந்து எந்த வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காமல் பாதுகாப்பு அளிக்கப்பட்டதா? மேலும் பள்ளிக்கூட வளாகத்தை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார்களா? காவல்துறையினர், மாணவியின் மரணத்திற்கு தொடர்புடைய இடங்களில் உள்ள தடயங்கள் அனைத்தும் அழிந்து விடாமல் பாதுகாப்பு கொடுத்தார்களா? இது போன்றெல்லாம், நடந்ததாக நமக்கு எந்த செய்தியும் வரவில்லை. பள்ளியின் விடுதியில் தங்கிப்படித்த சகமாணவிகளை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் முன், காவல்துறையினர் விசாரணைகளை முடித்து அனுப்பினார்களா? என்பதும் யாருக்கும் தெரியவில்லை. இந்த பள்ளியில் உள்ள அனைத்து cctv பதிவுகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளார்களா? என்பதும் தெரியவில்லை.
உயிரிழந்த மாணவியின் பெற்றோரோ, பல்வேறு சந்தேகங்களை எழுப்பி தொடர்ந்து சமூக ஊடகங்களின் வாயிலாகவும், நேராகவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். முதல் நான்கு நாட்கள் சாதாரண போராட்டமாக நடந்து கொண்டு இருந்தது, ஐந்தாம் நாள் திடீரென்று எப்படி வன்முறையாக வெடித்தது என்று யாருக்கும் தெரியவில்லை. அதேசமயம், மாணவி இறந்ததாக சொல்லப்படும் பள்ளிக்கு எந்த பாதுகாப்பும் அளிக்கப்படாமல் அனைத்து பொருட்களும் வீணாக்கப்படுவதும், அங்கு உள்ள ஆவணங்கள் எரிக்கப்படுவதும் தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் நம்மால் பார்க்க முடிந்தது. இனி மாணவியின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு தேவையான ஆதாரங்கள், அந்த இடத்திலிருந்து கிடைக்குமா? என்பதும் தற்போது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
ஐந்து நாட்கள் வரை அமைதியாக இருந்த காவல்துறையோ, அதன்பிறகு கண் விழித்து கொண்டு, மாணவியின் மரணத்திற்கு சந்தேகிக்கப்படுவதாக சொல்லி பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஒரு சிலர் கைது செய்யப்படுகிறார்கள். தற்பொழுது சிபிசிஐடி விசாரணை ஆரம்பித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரை தமிழக அரசு மாற்றி இருப்பதாகவும் செய்திகள் வருகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்பது போல் தமிழக அரசின் நடவடிக்கை இருக்கிறது. இந்த விசயத்தில் குறிப்பாக தமிழக காவல்துறையின் செயல்பாடு மிகவும் மெத்தனமா இருப்பதாகத்தான் பொதுமக்கள் கருதுகின்றனர்.
மேலும், யாராக இருந்தாலும், நியாயமாக போராடுவதை விட்டு விட்டு, கலவரத்தை தூண்டி, வன்முறை செயல்களில் ஈடுபடும்போது, அது விசாரணைக்கு இடையூறு ஏற்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நியாயம் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படும் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை சொல்லி ஆளும்கட்சியினர் தற்போது நடக்கும் தவறுகளுக்கு நியாயம் தேடுகிறார்கள். அன்றைக்கு நடந்ததும் ஒரு தவறான நடவடிக்கையாகத் தான் நானும் பார்க்கிறேன். இதனைக் காரணம் காட்டி, மீண்டும் அதே போன்ற ஒரு தவறை, இந்த ஆட்சியாளர்களும் செய்துவிட கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அரசாங்கம் நமக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையில் தான் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியில் வருகிறார்கள். எந்த ஒரு அரசாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான், நம் தமிழகம், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விட்டு சென்ற ஒரு அமைதியான மாநிலமாக தொடர்ந்து இருக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மாணவியின் மரணம் சம்பந்தப்பட்ட வழக்கு ஏற்கனவே நீதிமன்றங்களில் விசாரணையில் இருப்பதால், இதற்குமேல் இதைப்பற்றி சொல்வதும் ஏற்புடையதாக இருக்காது என்றும் கருதுகிறேன். எனவே, நீதிமன்றத்தின் கண்காணிப்பில் ஒரு வெளிப்படையான விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு, மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் உள்ள உண்மையை விரைவில் கண்டறிந்து, இதில் குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுத் தரவேண்டும், மாணவியை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு, நீதியும், நியாயமும் நிலைநாட்டிட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- கலவரத்தின் போது ஆட்டையை போட்ட பொருட்ளை எடுத்த இடத்தில் வச்சுருங்க.. தண்டோரா மூலம் போலீஸ் எச்சரிக்கை..!