செய்தியாளரை கட்டி வைத்து தாக்கிய திமுக குண்டர்கள்! ஆளுங்கட்சியின் பேச்சைக்கேட்டு போலீஸ் பொய் வழக்கு! அண்ணாமலை!
திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானதும் கூட.
திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானதும் கூட என அண்ணாமலை கூறியுள்ளார்.
டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திமுக அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 26ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தனது குடும்பத்துடன் ஜாபர் சாதிக் தலைமறைவானதை அடுத்து அவரது வீடு சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: இளைஞர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கியது தான் 3 ஆண்டு திமுகவின் சாதனை.. இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்.!
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சென்னையின் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் சஹாரா எக்ஸ்பிரஸ் கூரியர் நிறுவனத்திலும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக செய்தி சேகரிக்க பிரபல தனியார் நியூஸ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் திமுகவினரால் அறைக்கு இழுத்து சென்று கடுமையாக தாக்கப்பட்டார்.
இதுதொடர்பாக செந்தில்குமார் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம் பெண் ஒருவர் அளித்த பொய் புகாரின் பேரில் போலீசார் செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசுவுக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தியதை, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் செந்தில் குமாரை, அறையில் அடைத்து வைத்து, திமுகவினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதனை அடுத்து, அவர் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தற்போது, 55 வயது பெண்மணி ஒருவரை செந்தில் குமார் மீது போலியான புகார் கொடுக்க வைத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானதும் கூட.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டி? இந்த 5 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில்!
காவல்துறை, சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர, திமுக கட்சியின் ஒரு பிரிவாக அல்ல. உடனடியாக, செந்தில் குமார் மீது பதிவு செய்துள்ள பொய்யான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், செந்தில் குமாரைத் தாக்கிய திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.