கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக, போலீசாரால் சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார்.

கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 24 ம் தேதி மூன்று கார்களில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த காவலாளி ஒருவரை அடித்துக் கொன்றுவிட்டு, உள்ளே புகுந்து கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

கொள்ளை அடித்து சென்ற பொருட்கள் குறித்து சரியான தகவல் இல்லை. எனினும், அந்த சம்பவத்தோடு தொடர்புடையவராக போலீசால் சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர், மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார்.

அவரது கூட்டாளியான கேரளாவை சேர்ந்த சயான் என்பவரும், கார் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இரு விபத்துக்களும், ஒரே நாளில் நடந்ததால், அவை விபத்தா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என சந்தேகிக்கும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர், சேலம் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து விபத்தில் உயிரிழந்த சரவணன் பரிந்துரையின்  போயஸ் கார்டனில் வேலைக்கு சேர்ந்தவர்.

ஆனால், டிரைவர் கனகராஜ், சில திருட்டு வேலைகளில் ஈடுபட்டதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஆனாலும், அதிமுக முக்கிய பிரமுகர்கள் பலரிடமும் அவர் தொடர்பில் இருந்துள்ளார். குறிப்பாக எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடமும் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில், அவர் விபத்தில் உயிரிழப்பதற்கு, சில நாட்கள் முன்னதாக, சென்னை வந்து இங்குள்ள அதிமுக பிரமுகர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.

அப்போது பன்னீர்செல்வம் வீட்டுக்கும் வந்து, அவரது இரண்டாவது மகன் ஜெய் பிரதீப்புடன் சந்தித்து பேசி இருக்கிறார். அவருடைய செல்போனில் இருந்த இரண்டு சிம்மையும், போலீசார் ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, டிரைவர் கனகராஜ் யாரோடெல்லாம், செல்போனில் பேசினாரா, அவர்களை எல்லாம், போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 

அதன்படி, பன்னீரின் இளைய மகன் ஜெய் பிரதீப்பை நோக்கி விசாரணை வளையம் நெருங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.