police departure to bangalore to investigate sasi

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம் தொடர்பாக பெங்களுரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீஸ் டீம் விரைந்துள்ளது.

கடந்த 24-ந் தேதி அதிகாலை ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவுக்குள் புகுந்த 11 பேர் கொண்ட கும்பல் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை அடித்து கொலை செய்து விட்டு மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரை தாக்கியது.
பின்னர் பங்களாவுக்குள் நுழைந்து ஜெயலலிதா, சசிகலா அறைகளில் இருந்து ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 8 பேர் கைத செய்யப்படுள்ளனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். அவரது கூட்டாளி சயன் விபத்தில் சிக்கி கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஆனால் ஜெயலலிதாவின் பங்களாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்னென்ன? என்பது குறித்து முறையான தகவல்கள் இது வரை தெரிவில்லை. ஜெயலலிதாவின் அறையில் இருந்ததாக 5 கைக்கடிகாரங்கள், பளிங்கு கற்களால் ஆன காண்டாமிருக சிலை ஆகியவற்றையும், கொள்ளையர்கள் பயன்படுத்திய 2 கார்கள், 6 ஜோடி கையுறைகள், ஆயுதங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஆனால் பங்களாவிற்குள் கோடிக்கணக்கான பணம் இருந்ததாகவும், கொத்து ஆவணங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இகை கொள்ளையடிக்கப்படடதா? உண்மையிலேயே பணம் இருந்ததா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கொடநாடு பங்களாவுக்குள் என்னென்ன இருந்தது ? என்பது ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு மட்டுமே தெரியும் என்றும். ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் இது குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்தினால் விடை கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர்.

இதையடுத்து பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த காவல் துறையின் அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சசிகலாவிடம் விசாரணை நடத்த சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெங்களூரு சிறை நிர்வாகத்தின் அனுமதி கிடைத்ததும் சசிகலாவிடம் தனி போலீஸ் படையினர் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.