சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தளர்வுகளுடன் தமிழகம் முழுவதும் 5-வது கட்டமாக ஊரடங்கு தொடர்ந்து கொண்டிருந்தாலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
   
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் இன்று முதல் 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் அனுமதியின்றி வாகனங்களில் வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் இன்று காலை சென்னை வாலாஜா சாலையில் வாகன சோதனையை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும். வெளியில் வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். நோய்த்தொற்று பரவும் சூழல் இருந்தால் கடைகள் மூடப்படும். வணிக நிறுவனங்களில் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்’’என அவர் தெரிவித்தார்.