ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நேற்று நடந்த போராட்டத்தின்போது, போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டேன் என்று டிவி நடிகை நிலானி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவதற்கு பல்வேறு கட்சியினர், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐபிஎல் போட்டி நடைபெறுவதையொட்டி நேற்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, கௌதமன், தங்கர்பச்சான், வெற்றிமாறன், சீமான், வைரமுத்து, ராம், டிவி நடிகை நிலானி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

போராட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, நடிகை நிலானிக்கும் காயம் ஏற்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தவிர சீமான் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் என 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து காவிரி மீட்புக் குழு மற்றும் இயக்குநர் பாரதிராஜா, பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ், இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், கௌதமன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது டிவி நடிகை நிலானி போலீசார் மீது பரபரப்பு குற்றாச்சாட்டுகளைக் கூறினார்.

இது குறித்து நிலானி, நான் சின்னத்திரையிலும், சினிமாவிலும் நடித்து வருகிறேன். காவிரி மேலாண் வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்றேன். போலீஸ் நிலையம் அருகே வரை போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் நின்று நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தினோம்.

அப்போது அங்கு வந்த மொழி தெரியாத போலீசார், எங்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர். உடனே சாலையின் ஓரத்துக்கு சென்றேன். அப்போது போலீசார் ஒருவர் என் தோற்பகுதியில் கையை வைத்தார். அதை என் அருகில் இருந்தவர்கள் தட்டிக் கேட்டனர். அப்போது எனக்கு முன்னால் நின்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். போலீசார் தாக்கியதில் என் மீது சிலர் விழுந்தனர். இதனால் நானும் கீழே விழுந்தேன். இதில் எனக்கு கை கால்களில் காயங்கள் ஏற்பட்டன. இன்னொரு பெண்ணுக்கும் காலில் காயம் ஏற்பட்டது. தற்காப்புக்காக சிலர் போலீசாரை தாக்கினர். 

நான் எந்த அரசியல் கட்டிசயிலும் இல்லை. தமிழன் என்ற உணர்வு அடிப்படையில் இந்த போராட்டத்தில் பங்கேற்றேன். ஆனால், என்னிடம் போலீசார் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்போது அது வன்முறை என்றே தெரிகிறது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். இது கண்டனத்துக்குரியது என்று நடிகை நிலானி கூறியுள்ளார்.