police arrested a person who morphing chief minister shirt pocket photo

முதல்வர் பழனிசாமியின் சட்டைப் பையில் பிரதமர் மோடியின் படம் இருப்பதுபோல் மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட மதுரையை சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

அதிமுக நிர்வாகிகள் வெள்ளை சட்டை அணிந்து, சட்டைப்பையில் தங்கள் ஆஸ்தான தலைவியான ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியே தெரிவது போல வழக்கம்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. தமிழக அரசை இயக்குவதே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுதான் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியின் சட்டைப்பையில் பிரதமர் மோடியின் படம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவந்தது.

ஓகி புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்வதற்காக கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது முதல்வர் பழனிசாமியின் சட்டைப் பையில் பிரதமர் மோடியின் படம் இருப்பது போன்ற படம் வாட்ஸ் அப்பில் வெளியாகி, சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

இதுகுறித்து குமரி மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் கனகராஜ், போலீசாரிடம் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கைது செய்துள்ளனர்.

குமரியில் வியாபாரம் செய்துவரும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.