என்னதான் அதிக மக்கள் தொகை கொண்ட சாதி கட்சியின்  தலைவர் என்றாலும்,  தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாக இருந்தாலும்,  தேர்தல் களம் என்றுவரும்போது தோல்வி மட்டும்தான் மிச்சம் என்ற நிலையில் உள்ளது பாமகவின் நிலை. கட்சியின் உண்மை நிலவரத்தை அறிந்து கொண்ட  ராமதாஸ் உண்மையாக மக்களுக்காக உழைக்கும் பாமகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று பகிரங்கமாக அறிக்கை விட்டு கொஞ்சம் நிலைமையே பாமகவின் நிலை என்ன என்பதை காட்டிவிட்டது. 

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி,  அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்த நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி இரண்டு தேர்தல்களிலும் ஒரு இடத்தில்கூட பாமாக வெற்றிபெறவில்லை என்பதை அனைவரும் அறிந்ததே.  முன்கூட்டியே,  ஏதோ  தப்பித்தவறி  அதிமுகவுடன் செய்துகொண்ட கூட்டணி உடன்படிக்கையின்படி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு பெறப்பட்டுள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவியே பாமகவுக்கு ஒரே ஆறுதல். அதே நேரத்தில் தன் தேர்தல் வியூகங்கள் மூலம் கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்து  தன் பலத்தை நிரூபித்துள்ளது பாமக,  இது அக்காட்சித் தொண்டர்களுக்கு மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்று மீண்டும் கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற வியாகத்தில்  பாமக நிறுவனர் ராமதாஸ், மற்றும் அக்கட்சியின்  இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் களம் இறங்கியுள்ளனர்.

இதற்காக அரசியல் ஆலோசனைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பாமகவின் முன்னாள் தலைவராக இருந்த பேராசிரியர் தீரன் ஆலோசனைக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் முன்னாள் மத்திய இணை அமைச்சராக இருந்த அரங்க வேலு, மற்றும் முன்னாள் எம்எல்ஏ இரா. கோவிந்தசாமி ஆகியோரும்  குழுவில் இடம்பெற்றுள்ளனர்.  ஏற்கனவே அன்புமணி ராமதாசை முதல்வராக  முன் நிறுத்தும்  வகையில் தங்கை படை, தம்பி படை, என முப்படைகளை உருவாக்கி சாதி வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்ச்சியில் அதிரடி காட்டியுள்ள நிலையில், பாமகவிற்கு அரசியல் ஆலோசனைக்குழு அமைத்திருப்பது நிச்சயம் பாமகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று பாமகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.