மக்களவை தேர்தலில் அடைந்த படுதோல்வியை உள்ளாட்சித் தேர்தலில் வட்டியும் முதலுமாக அள்ள வேண்டும் என கணக்குப்போட்டு வருகிறது பாமக.

இது தொடர்பாக இப்போதே அக்கட்சி தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. அதில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம். தனித்தே போட்டியிட்டு நம் பலத்தை மீண்டும் நிரூபிக்க வேண்டும். ராஜ்ய சபா சீட் கொடுக்கும் விவகாரத்தில் அதிமுக தண்ணீர் காட்டி வருகிறது என நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ்தான் விடாப்பிடியாக இருந்தார். அவரது முடிவை அன்புமணி ராமதாஸ் விரும்பவில்லை. இருப்பினும் வேறு வழியின்றி அதற்கு அன்புமணி ஒத்துழைத்தார். அதிமுக கூட்டணியுடன் இணைந்ததால் தான் இந்தப்படுதோல்வி. 

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் மக்கள் நம்மீது நம்பிக்கை இழந்து விட்டனர். பல விஷயங்களில் அதிமுகவின் திட்டங்களை கடுமையாக எதிர்த்து விட்டு மீண்டும் அவர்களுடன் போய் கூட்டணி வைத்தால் எப்படி மக்கள் நம்மை நம்புவார்கள்? ஆகையால் பாமகவின் முடிவுகளை ஒரே ஆள் நிர்மாணிக்க வேண்டும். 

ஆகையால் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக பதவியேற்க வேண்டும். டாக்டர் ராமதாஸ்  வழிகாட்டியாக இருந்தால் மட்டும் போதும். கூட்டணி மற்றும் பிற பேச்சுவார்த்தைகளையும் முடிவுகளையும் அன்புமணியே எடுத்துக் கொள்ளட்டும். தற்போது பாமக தலைவராக உள்ள ஜி.கே.மணிக்கு வேறு ஒரு முக்கியப்பதவி கொடுக்கலாம் என நிர்வாகிகள் கோஷம் எழுப்பி வருகிறார்களாம். இதனால் பாமகவின் அடுத்த பொதுக்குழுவில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.