Asianet News TamilAsianet News Tamil

அமைச்சரை கட்டம் கட்டி அடிக்கும் பாமக... மண்டை காயவைக்கும் ஊழல் பட்டியல்!!

பணத்துக்காக காலில் விழுந்து கழுவுவது தான் பனங்காட்டு நரியின் வழக்கமா? - பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் சா.பெ. வெங்கடேஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

PMK secretory Statements against MInister Anbazhagan
Author
Chennai, First Published Oct 3, 2018, 3:15 PM IST

தருமபுரி மாவட்டத்திலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர்  கே.பி. அன்பழகன் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அமைச்சருக்கு ஆண்மையிருந்தால் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக சிப்காட் வளாகத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருமபுரி மக்களவை உறுப்பினரும், மத்திய சுகாதாரத்  துறையின் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அண்மையில் முன் சவால் விடுத்திருந்தார்.

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு ஆண்மை இருந்திருந்தால் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள சிப்காட் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் தமது இயலாமையை ஒப்புக்கொண்டு ஓரத்தில் ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதை விடுத்து, இதற்காக தருமபுரியில் செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி, ‘‘ எனக்கு ஆண்மையில்லை என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறிவிட்டார். 

சிப்காட் அமைப்பதற்கும், ஆண்மைக்கும் என்ன சம்பந்தம்?’’ என்று கேட்டு மக்களவை உறுப்பினரை அவதூறு வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார். அவரது தகுதி, தரம் என்ன என்பதை அமைச்சர் அன்பழகன் நிரூபித்து விட்டார். எதையோ குளிப்பாட்டி எங்கோ வைத்தாலும், அது செல்ல வேண்டிய இடத்துக்குத் தான் செல்லுமாம் என்பதைப் போல கே.பி. அன்பழகன் அமைச்சர் நிலைக்கு உயர்ந்தாலும் அவர் அவரது இயல்பு நிலைக்கு சறுக்கிச் சென்று தமது உண்மைத் தகுதி என்ன? என்பதைக் காட்டி விட்டார். 

அது அவரது இயல்பு.

அமைச்சரின் செயல்பாடுகள் அவருக்கு ஆண்மை இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றன. சிப்காட் வளாகம் அமைப்பதற்கும் ஆண்மைக்கும் என்ன சம்பந்தம்? என்று அமைச்சர் மீண்டும், மீண்டும் கேட்டு கொதித்திருக்கிறார். ஆண்மை என்பதற்கு திறன், ஆளுமை, சக்தி என்பன உள்ளிட்ட பல அர்த்தங்கள் உள்ளன. பேராண்மை, மேலாண்மை, இறையாண்மை, நாட்டாண்மை, ஊராண்மை ஆகியவை ஆண்மையின் வகைப்பாடுகள் தான். பேராண்மையும், மேலாண்மையும் இருந்திருந்தால் சிப்காட் தொழில் வளாகத்தை அமைச்சர் அமைத்திருக்கலாம். 

"

ஆனால், தமக்குத் தெரிந்த காயகல்பத்துடன் மட்டுமே ஆண்மையை தொடர்புபடுத்திப் பார்த்துள்ள அமைச்சர் அன்பழகன், தம்மை மருத்துவர் அன்புமணி இராமதாசு அவமதித்து விட்டதாக கொந்தளித்திருக்கிறார். ஆண்மையற்றவர்கள் அப்படித் தான் செய்வார்கள்.

அதுமட்டுமின்றி, மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு ஆறறிவு இல்லை; அவருக்கு ஐந்தறிவு மட்டுமே இருப்பதாகவும் அமைச்சர் கொக்கரித்திருக்கிறார். அமைச்சரின் செயல்பாடுகளை அளவீடாகக் கொண்டு பார்த்தால் அவருக்கு எந்த அறிவுமே கிடையாது. ஜெயலலிதாவின் கால்களில் தொடங்கி சசிகலா,  டி.டி.வி. தினகரன், முன்பு ஓ.பன்னீர்செல்வம், இப்போது எடப்பாடி பழனிச்சாமி என கண்களில் படும் கால்களில் எல்லாம் விழுந்து, எழுந்து அவர்கள் புண்ணியத்தில் ஊழல் செய்து பிழைக்கும் அன்பழகனுக்கு அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. 

அவ்வகையில் பார்த்தால் அவர் ஓரறிவு விலங்கு.... இல்லை... விலங்கு என்று கூற முடியாது... அவர் ஓரறிவு ஜந்து. வரும் தேர்தலில் மக்களால் நசுக்கப்பட இருப்பவர்.

அதிமுகவின் அதிகாரத்தில் இருக்கும் நபர்களில் கால்கள் மண்ணில் புதைந்திருந்தால் அதற்கு இணையாக குழிதோண்டி, அந்த குழியில் விழுந்து காலைத் தொடங்கும் வணங்கும் அளவுக்கு ஆகச் சிறந்த அடிமையான அன்பழகன், செய்தியாளர் சந்திப்பின் போது தம்மை பனங்காட்டு நரி என்றும் சலசலப்புக்கு அஞ்சப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். 

உண்மையில் அவரது வீரம் விழுந்து வணங்குவதில் தான். உயர்கல்வித்துறை அமைச்சராக இவர் பதவியேற்ற சில நாட்களில் அத்துறையின் செயலாளராக சுனில் பாலிவால் நியமிக்கப்பட்டார். ஆண்மையும், ஆளுமையும் கொண்ட பாலிவால் உயர்கல்வித்துறையை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார். இதனால் ஊழல் செய்யக்கூட வழியின்றி தவித்த அன்பழகன், ஒரு கட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கால்களில் விழுந்து சுனில்பாலிவால் செயலராக இருக்கும் வரை ஊழல் பணம் எனக்கு முழுமையாக வராது; எனவே அவரை இடமாற்றம் செய்யுங்கள் என்று கதறினார். அதன்காரணமாகவே சுனில் பாலிவால் மாற்றப்பட்டார். 

ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காக காலில் விழுந்து கதறுவது தான் பனங்காட்டு நரியின் வீரமா? என்பதை உயர் ஊழல் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்க வேண்டும். அவர் விளக்குவாரா? அதுமட்டுமின்றி பனங்காட்டு நரிக்கு ஐந்தறிவு தான். தம்மை பனங்காட்டு நரி என்று அழைத்துக் கொள்வதன் மூலம் தமக்கு ஐந்தறிவு தான் என்பதற்கு அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா?

1. தமிழ்நாட்டில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆண்டு கல்விக்  கட்டணம் 2017-18 ஆம் ஆண்டில் ரூ.75 ஆயிரத்திலிருந்து ரூ.85 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதற்காக தனியார் பொறியியல் கல்லூரிகளில் இருந்து கோடிக்கணக்கில் அமைச்சர் கையூட்டு வாங்கியது உண்மையா..... இல்லையா?


2. பொறியியல் கல்வி பயிலும் தலித் மாணவர்களுக்கு முழுக்கட்டணத் தொகையும் கல்வி உதவித் தொகையாக அரசால் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு தலித் மாணவருக்கும் தலா ரூ.10,000 வீதம்  தனியார் கல்லூரிகளிடமிருந்து அமைச்சர் கையூட்டு வாங்கியது உண்மையா... இல்லையா? இந்த வகையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.20 கோடி பணம் பார்த்தாரா.... இல்லையா? தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை தட்டிப்பறிப்பது அசிங்கம் இல்லையா?

3. தேனி, மதுரை, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கட்டிடங்களை கட்டுவதற்கான ரூ.79 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை வழங்க 20% கமிஷனாக ரூ.16 கோடி கையூட்டு தரும்படி வெங்கன் என்ற ஒப்பந்ததாரரிடம் அமைச்சர் பேரம் பேசியது உண்மையா... இல்லையா? இதுதொடர்பாக அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கன் வழக்குத் தொடர்ந்தாரா.... இல்லையா?

4. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்காக ரூ.5 கோடி முதல் ரூ.20 கோடி வரை பேரம் பேசி கையூட்டு வாங்கியது உண்மையா... இல்லையா?


5. கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் கொண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை என்பவருக்கு அடிப்படை தகுதி கூட இல்லை என்று கூறி  அவரை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பதவி நீக்கம் செய்தனவா.... இல்லையா?

6. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் செய்யப்படும் பணி நியமனங்கள், கட்டுமான ஒப்பந்தங்கள்,  கணினி, தேர்வுத்தாள் உள்ளிட்ட பொருட்களின் கொள்முதல் ஆகியவற்றில் வசூலிக்கப்படும் கையூட்டில் தமக்கு ஒரு பங்கு வேண்டும் என மிரட்டி வாங்குவது உண்மையா.... இல்லையா?

7. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால், அவர்களிடமிருந்து அமைச்சர் அன்பழகனுக்கு குறிப்பிட்ட தொகை வசூலித்துத் தர வேண்டும் என்பதற்காக, அப்பல்கலை.க்கு பேராசிரியர்களை நியமிப்பதையே அதன் தற்போதைய துணைவேந்தர் நிறுத்தி வைத்திருக்கிறாரா... இல்லையா?

8. தருமபுரி மாவட்டத்திலும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் பினாமிகளுக்குத் தான் அரசு கட்டுமான பணிகள் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. பாலக்கோடு தொகுதியில் நடைபெறும் பெரும்பாலான பணிகளுக்கான ஒப்பந்தங்களும் அமைச்சரின் மருமகன் ரவிஷங்கர் நடத்தும் பாக்யலட்சுமி நிறுவனத்துக்கு  வழங்கப்படுகின்றன. பென்னாகரம் தொகுதியில் டி.ஆர். அன்பழகன், கே.வி. ரங்கநாதன், தருமபுரி தொகுதியில் கோவிந்தசாமி, வெற்றிவேல், இக்பால் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய தொகுதிகளில் மதிவாணன், பரமசிவம் ஆகிய அமைச்சரின் பினாமிகளுக்கும், அவர்கள் கை காட்டுபவர்களுக்கும் மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. இது உண்மையா.... இல்லையா?

9. தருமபுரி மாவட்டம் தொடர்பான பணிகளை சாதிக்க அமைச்சர் அன்பழகன் மனைவியின் சகோதரர் செந்திலும், உயர்கல்வித்துறை தொடர்பான காரியங்களை சாதித்துக் கொள்ள அமைச்சரின் உதவியாளர் பொன்னுவேலும் தரகர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்களா...... இல்லையா? இவர்கள் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் செய்யப்படுகிறதா... இல்லையா?

10. தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் பணிகளுக்காக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக பொதுப்பணித் துறைக்கு 12%, நெடுஞ்சாலைத் துறைக்கு 15%, ஊரக வளர்ச்சித்துறைக்கு 15% வீதம் கையூட்டு  வசூலிக்கப்பட்டு அமைச்சரிடம் ஒப்படைக்கப்படுகிறதா.... இல்லையா?

உயர்கல்வித்துறைக்கு அமைச்சராக இருக்கும் கே.பி. அன்பழகனின் கல்வித்தகுதி என்ன தெரியுமா? வெறும் 11-ஆம் வகுப்பு (பி.யூ.சி) தான். 1976-ஆம் ஆண்டு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா கலைக் கல்லூரியில் இந்தப் படிப்பை முடித்துள்ளார். இதை ஒரு குறையாக கூற விரும்பவில்லை. 

ஆனால், அமைச்சர் அன்பழகன் பி.எஸ்சி பட்டம் முடித்திருப்பதாக தருமபுரி மாவட்டத்தில் அச்சிடப்படும் அரசு மற்றும் அதிமுக சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் குறிப்பிடப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 420-ஆவது பிரிவின்படி போர்ஜரி குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டியவர் உயர்கல்வி அமைச்சராக இருப்பது வெட்கக் கேடானது. 

இந்த போர்ஜரி குற்றத்தை அமைச்சரால் மறுக்க முடியுமா?

எந்த வகையிலும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுடன் ஒப்பிடுவதற்கு தகுதி இல்லாத அமைச்சர் கே.பி.அன்பழகன் அமைச்சராக வாய்த்தது தருமபுரி மாவட்டத்தின் சாபக்கேடு ஆகும். ஒட்டுமொத்த தருமபுரி மாவட்ட மக்களின் ஆதரவையும் பெற்ற மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை மரியாதைக்குறைவாக விமர்சித்த அமைச்சர் கே.பி.அன்பழகன் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது இல்லம் முற்றுகை, அவர் செல்லுமிடமெல்லாம் கருப்புக் கொடி காட்டுதல் உள்ளிட்ட போராட்டங்களை தருமபுரி மாவட்ட பா.ம.க. நடத்தும் என எச்சரிக்கிறேன் என காட்டமான தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios