பஞ்சமி நிலத்தை பற்றி வதந்தி பரப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

 

முரசொலி பஞ்சமி நிலமா? என்கிற விசாரணை இன்று  நடைபெற்றது.  இந்த விசாரணையில் அரசு தரப்பில் தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.  சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியும் விசாரணையில் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.  மனுதாரராக பாஜக நிர்வாகி சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

சாஸ்திரி பவனில் உள்ள தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குநர் அலுவலகத்தில்  தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் மனுதாரர் ஆதாரங்களைக் காட்ட அவகாசம் கேட்டதால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, ‘’எங்களுக்கு மடியிலே கனமில்லை. நாங்கள் தகுந்த ஆதரத்தை காட்டினோம். ஆனால் புகார் மனு அளித்தவர் வாய்தா கேட்டுவிட்டார்.

அதேபோல் தலைமை செயலாளர் சண்முகமும் அவகாசம் கேட்டுள்ளார். ஆகையால் இன்றே இந்த வழக்கு முடிந்து விடும் எனக் கருதுகிறோம். இந்த ஆணையருக்கு இந்த விசாரணை செய்ய அதிகாரமில்லை. பட்டியல் இனத்தவர் ஆணையர் இந்த விசாரணை நடத்த அதிகாரமில்லை. இந்த பிரச்னையை கிளப்பிய ராமதாஸ் மீதும், புகார் கொடுத்த பாஜக நிர்வாகி சீனிவாசன் மீதும் நீதிமன்றத்தில் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இருக்கிறோம்’’எனத் தெரிவித்துள்ளார்.