உறுதி மொழி அளித்தபடி எம்பி பதவி கொடுத்த பிறகும் வேலூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு ராமதாசோ அன்புமணியோ வராதது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டென்சனாக்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பாமகவிற்கு சீட்டுகளை அள்ளிக் கொடுத்தது அதிமுக. தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையிலும் தேர்தல் முடிந்த பிறகு கூறியபடி ராஜ்யசபா எம்பி பதவியை அன்புமணிக்கு கொடுத்து அழகு பார்த்தது அதிமுக. இதன் பின்னணியில் முழுக்க முழுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் இருந்துள்ளார். கூட்டணி உருவானது முதல் ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தது வரை எடப்பாடி தான் பாமகவிற்கு அணுசரணையாக இருந்துள்ளார். 

இந்த சூழலில் தான் வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. வேலூரில் வெற்றி பெற்றால் தான் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் பிரச்சனை இல்லாமல் இருக்கும் என்று எடப்பாடி கருதுகிறார். மேலும் அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்தது முதல் தற்போது வரை தேர்தலில் பெரிய அளவில் எடப்பாடியால் வெற்றி பெற முடியவில்லை.  

அதனால் வேலூரில் வெற்றி வாகை சூடி அந்த சென்டிமெண்டை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி கருதுகிறார். இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் வேலூரில் தேர்தல் பணிகளை எடப்பாடியே நேரடியாக கண்காணித்து வருகிறார். அந்த வகையில் பாஜகவால் எதிர்மறை விமர்சனம் வரும் என்பதால் அக்கட்சியை வேலூர் பக்கமே வர வேண்டாம் என்று அதிமுக கூறிவிட்டது. அதே சமயம் வேலூரில் பாமகவிற்கு கணிசமான வாக்குகள் உண்டு. அங்கு வன்னியர்களும் கணிசமாக உள்ளனர். 

எனவே ராமதாஸ் வேலூரில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி எதிர்பார்த்தார். இதற்காக அதிமுக தரப்பு இரண்டு மூன்று முறை ராமதாசை தொடர்பு கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டுவிட்டு ராமதாஸ் ஒதுங்கிவிட்டார். இதே போல் அன்புமணியும் கூட பிரச்சாரத்திற்கு வரவில்லை. எவ்வளவோ செய்தும் ராமதாஸ் இப்படி பிகு செய்கிறாரோ என்று எடப்பாடி இதனால் டென்சன் ஆகியுள்ளார்.

 

மேலும், வேலூரில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமகவின் முக்கிய நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. ஜி.கே மணியை கூட ராமதாஸ் அனுப்பி வைக்கவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.