எவ்வித எழுச்சியும் இல்லாத நிலையில் சமீபத்தில் கோயமுத்தூரில் ‘அரசியல் எழுச்சி மாநாடு’ என்ற ஒன்றை நடத்தியது  இந்திய கம்யூனிஸ்ட். இதில் கலந்து கொண்ட தி.மு.க.வின் கூட்டணி தலைவர்கள் அத்தனை பேரும் பா.ம.க.வையும், அ.தி.மு.க.வையும் போட்டுக் கிழி கிழியென கிழித்தெறிந்தனர். உச்சபட்சமாக, மார்க்சிஸ்டின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனோ...’மதுக்கடைகளை எதிர்க்கும் கட்சியாக தன்னை காட்டிக் கொண்டிருந்தது பா.ம.க. டாஸ்மாக் நடத்தும் அ.தி.மு.க.வுடன் இப்போது கூட்டணி வைத்ததன் மூலம் பார்களுக்கு பக்கத்தில் பக்கோடா கடை போட்டு சம்பாரிக்கப்போகிறார்கள் போல.’ என்று அடித்த கிண்டல் பா.ம.க.வை உசுப்பி உஷ்ணப்படுத்திவிட்டது. 

இதன் விளைவாக, இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் கம்யூனிஸ்டுகளை கடைந்தெடுத்து திட்டிக் கொண்டிருக்கிறது பா.ம.க. அதன் ஹைலைட் பாயிண்டுகள் இதோ...

*    கடந்த ஒரு தலைமுறைக்கும் மேலாக திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி வந்து சீட் பிச்சை எடுத்து அரசியல் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு அடுத்த கட்சிகளைப் பற்றிப் பேச எந்த யோக்கியதையும் இல்லை. 

*    நாங்கள் தனித்து நின்றிருக்கிறோம். தைரியம் என்று ஒன்றிருந்தால் கம்யூனிஸ்டுகள் தனித்து கூட வேண்டாம், இருவரும் ஒன்றாக சேர்ந்து நிற்கட்டும் பார்க்கலாம். 

*    மாநிலத்துக்கு ஒரு கொள்கை வைத்துக் கொண்டு தன்னை தேசிய இயக்கங்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஜோக்கர் கூட்டம்தான் கம்யூனிஸ்டுகள். 

*    இ.கம்யூனிஸ்டின் டி.ராஜாவும், மார்க்சிஸ்டின் ரங்கராஜனும் அ.தி.மு.க. போட்ட ராஜ்யசபா சீட்டில் எம்.பி. வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். கொள்கை, கோட்பாடு என ஏதாவது இருந்தால் இப்படி பிழைக்க தோண்றுமா? அ.தி.மு.க.வை விட்டு நகர்கையில் தூக்கி எறிந்திருக்க வேண்டாமா அவர்களிடம் யாசகம் பெற்ற பதவிகளை? இதைச் செய்யாத கம்யூனிஸ்டுகள் எங்களை சந்தர்ப்பவாதி என்று திட்டுவதற்கு நாக்கில் நரம்பில்லாததுதானே காரணம்?

*    முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்துக்கு தீங்கு தரும் மார்க்சிஸ்ட் அரசை தட்டிக் கேட்க திராணியில்லை தமிழக மார்க்சிஸ்டுகளுக்கு. ரெட்டை வேடம் போடும் இவர்களெல்லாம் அரசியல் தூய்மை பற்றி பேசலமா?

*    கம்யூனிஸ்டுகளின் எஃகு கோட்டையாக இருந்த திரிபுராவில் பி.ஜே.பி.யிடம் ஆட்சியை இழந்தார்கள். லெலின் சிலையை உடைத்தெறிந்தபோது அதை தீரமாக தட்டிக் கேட்க கூட இவர்களுக்கு தைரியமில்லை. 

*    ராஜிவ் காந்தி மறைவின் போது காம்ரேட் தலைவர் ஜோதிபாசு பிரதமராகும் வாய்ப்பு கனிந்து வந்தது. ஆனால் அதை தட்டிவிட்ட கைகள் அதே கம்யூனிஸ் கைகள்தான். அந்த பாவத்தை இன்று வரை சுமக்கிறார்கள். 

*    சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள், தேசிய தலைவராக இருந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜித் டர்பன் கட்டியதை கண்டிக்கவில்லை, இங்கே தா.பாண்டியன் காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பொலிட் பீரோ மெம்பராக இருந்ததையும் தடுக்க முடியவில்லை. 

*    தேர்தல் ஆணையத்தின் விதிப்படி ஆறு சதவிகித வாக்குகளை வாங்காத காரணத்தினால் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ச‘கதிர் அரிவாள் சுத்தியல்’ சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கிவிட்டது. அந்த ஆணையத்திடம் கெஞ்சி கூத்தாடி மீண்டும் அதை வாங்கிப் போட்டியிடுகிறார்கள். இவர்களெல்லாம் எங்களைப் பற்றிப் பேசுவதா? என்று வெளுத்திருக்கிறார்கள். பா.ம.க.வின் இந்த பாய்ச்சலுக்கு காம்ரேடுகளின் பதில் என்ன?