திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகி விடும் என்கிற கோணத்தில் திருமாவளவன் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த திருமாவளவன், “பாஜகவும், பாமகவும் சனாதான அரசியலை கையில் எடுத்துள்ள கட்சிகள். சாதியத்தையும், மதவாதத்தையும் தேர்தல் அரசியலுக்காக செய்யும், அந்த அரசியல் கட்சிகளுடன் எந்தச் சூழ்நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைக்காது என ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டோம். 

அப்போது, திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் அங்கு விசிக இருக்காது என எடுத்துக் கொள்ளலாமா என கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த திருமாவளவன், ’உங்களுடைய யூகத்திற்கு இடையூறாக நான் இருக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார். இதன்மூலம், ஒருவேளை திமுகவுடன் பாமக கைக் கோர்க்கும் பட்சத்தில், கூட்டணியில் இருந்து விசிக விலகிவிடும் என்ற பதிலை சொல்லாமல் சொல்லிவிட்டார் திருமாவளவன்.

 திமுக 200 இடங்களில் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி வரும் என்றும் திருமாவளவன் சுட்டிக்காட்டினார். எனவே பாமக கூட்டணி, தொகுதி பங்கீடு போன்ற பல காரணங்களால் திமுக கூட்டணியில் இருந்து விசிக எப்போது வேண்டுமானாலும் வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்ற ரீதியில் திருமாவளவனின் இந்த கருத்து பார்க்கப்படுகிறது. 

திருமாவளனின் கருத்து திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தங்களுக்கு எந்த பகையும் இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்தார். இத்தனை காலமாக இரு கட்சிகள் இடையேயும் மோதல் போக்கு வெளிப்படையாக நீடித்து வந்த நிலையில், ராமதாஸின் இந்த கருத்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனால் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன், பாமகவும் ஒரே கூட்டணியில் இடம் பெறக்கூடும் என்று கூட அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.