தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி  உறுதியாக அமையும் என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவின் இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கட்சியின் இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி, இணை செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “பாமக இளைஞர் அணியில் உள்ள ஒவ்வொரு ஒன்றிய நிர்வாகிகளும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு ஓர் இளைஞரை தர வேண்டும். அப்படி தரப்படுபவர் விலைபோகாதவராகவும் வலிமையானவராகவும் உண்மையானவராகவும் இருக்க வேண்டும்.


பாமக தற்போது கூட்டணியில் இருக்கிறது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட நமக்கு  நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். உள்ளாசித் தேர்தலில் அதிக வாய்ப்பு இளைஞர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸிடம் கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி  உறுதியாக அமையும். இதை யார், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும்.
என்னிடம் ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தைப் பற்றி இப்போது சொல்லமாட்டேன். நேரம் வரும்போது சொல்வேன். இளைஞர் சக்தியால் மட்டுமே மாற்றங்களைக் கொண்டுவர முடியும். இளைஞர்களால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. இதை மனதில் வைத்து தமிழகத்தில் மாற்றம் முன்னேற்றத்தைக் கொண்டு வருவோம்.” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பிடித்துள்ளது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி’ என்ற ஸ்லோகனுடம் பாமக தனித்து களம் கண்டது. அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் சுமார் 6 சதவீத வாக்குகளைப் பெற்றபோதும் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாமக, தமிழகத்தில் விரைவில் பாமக ஆட்சி அமையும் என்று கூறியுள்ளது. எனவே அதிமுக கூட்டணியிலிருந்து அக்கட்சி வெளியேற திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.