சில கருத்துகளை திட்டமிட்டே பேசுகிறார். பெரியார் குறித்து பேசிய கருத்துகளை ரஜினி தவிர்த்திருக்கலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
துக்ளக் விழாவில் பெரியாரைப் பற்றி ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பாஜகவை தவிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்தன. எல்லா விஷயங்களிலும் கருத்து தெரிவிக்கும் பாமக, இந்த விவகாரத்தில் அமைதி காத்தது. நீண்ட அமைதிக்கு பிறகு, ‘பெரியார் பற்றிய பேச்சை ரஜினி தவிர்த்திருக்கலாம். இந்த விவகாரத்தைத் தாண்டி தமிழகத்தில் பல பிரச்னைகள் உள்ளன.” என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி தெரிவித்திருந்தார்.

 
 இந்நிலையில் ரஜினி பற்றி சர்ச்சை கேள்விக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், “செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் உரிய பதிலை சொல்லமாட்டார். மழுப்பலாகப் பேசிவிட்டு சென்றுவிடுவார். ஆனால், சில கருத்துகளை திட்டமிட்டே பேசுகிறார். பெரியார் குறித்து பேசிய கருத்துகளை ரஜினி தவிர்த்திருக்கலாம். தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்துபவர்களும் அவரை அவமதிப்பு செய்பவர்களும் காட்டுமிராண்டிகள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்தார்.