இத்தகைய சூழலில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் விவசாயம் அழிந்து போயிருக்கும். அத்திட்டம் கைவிடப்பட்டிருப்பதன் மூலம் இரு மாவட்டங்களும் காப்பாற்றப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு பாமக நன்றி தெரிவித்துக் கொள்கிறது. விவசாயத்தை பாதிக்கும் இத்திட்டத்தை கைவிடச் செய்து விவசாயத்தை காப்பாற்றியதில் பாமக பெருமிதம் அடைகிறது'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான அரசாணை ரத்து செய்திருப்பதற்கு தமிழக அரசுக்கு பாமக நன்றி தெரிவித்துக் கொள்கிறது. விவசாயத்தை பாதிக்கும் இத்திட்டத்தை கைவிடச் செய்து விவசாயத்தை காப்பாற்றியதில் பாமக பெருமிதம் அடைகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 57,345 ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த இத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பாமகவின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 25 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் 20 கிராமங்கள் என மொத்தம் 45 கிராமங்களை பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் மண்டலமாக மாற்றும் இத்திட்டம் கடந்த 2008-09 ஆம் ஆண்டுக்கான தொழில்துறை மானியக் கோரிக்கையில்தான் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்தத் திட்டத்தின் ஒரு கட்டமாக கடலூர் மாவட்டத்தில் நாகார்ஜுனா நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைக்கு 02.07.2008 அன்று அப்போதைய முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டினார். அப்போது உருவாக்கப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணையை 2017-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி இப்போதைய அரசு வெளியிட்டது. அதுமட்டுமின்றி, அத்திட்டத்தை ரூ.92,000 கோடியில் நாகார்ஜுனா குழுமம் செயல்படுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதால், இத்திட்டத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நாசகார திட்டத்தை கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருந்த பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து கருத்துக் கேட்டார். அதனடிப்படையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும்படி அரசை வலியுறுத்தியது.


கடலூர் மாவட்ட மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலைகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்தும், அவற்றைப் போக்க வலியுறுத்தியும் கடந்த 15 ஆண்டுகளாக ஏராளமான போராட்டங்களை நான் நடத்தியுள்ளேன். அதே நோக்கத்துடன்தான் சுற்றுச்சூழலை சீரழிக்கக்கூடிய பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்திற்கு எதிராகவும் பாமக சார்பில் தொடர் இயக்கங்கள் நடத்தப்பட்டன. அதேபோல், நாகை மாவட்டத்திலும் ஏராளமான மின்சாரத் திட்டங்களும், கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
இத்தகைய சூழலில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் விவசாயம் அழிந்து போயிருக்கும். அத்திட்டம் கைவிடப்பட்டிருப்பதன் மூலம் இரு மாவட்டங்களும் காப்பாற்றப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு பாமக நன்றி தெரிவித்துக் கொள்கிறது. விவசாயத்தை பாதிக்கும் இத்திட்டத்தை கைவிடச் செய்து விவசாயத்தை காப்பாற்றியதில் பாமக பெருமிதம் அடைகிறது'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.