வன்னியர்களின் மக்கள்தொகை மற்றும் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 17 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பாமகவின் சிறப்பு செயற்குழு கூட்டம் காணொளி காட்சி வழியாக இன்று நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வீட்டில் இருந்தபடியே பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதன்படி, “ கொரோனா வைரஸ் பரவல் விரைவாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்; அரசின் முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்; தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 17 தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; மருத்துவர் அய்யா தலைமையில் 9 ஆண்டுகள் தொடர் போராட்டம் நடத்திய போதிலும், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயத்தினரை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு, அப்பிரிவுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 
அப்பிரிவில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. வன்னியர்களுக்கு உரிய சமூகநீதியும், இடஒதுக்கீடும் கிடைக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். வன்னியர்களின் மக்கள்தொகை மற்றும் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 17 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முறையான ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி, உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று பா.ம.க. செயற்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இளம்பெண்கள் & குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை; மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; கிரிமிலேயரை கணக்கிட சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ளும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்; புதிய மதுக்கடைகளை திறக்கக்கூடாது: முழு மதுவிலக்கே உடனடித் தேவை; குறுவைப் பயிர்களைக் காக்க காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டும்; வங்கிக்கடன் தவணைகள் மீதான வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும்; மகளிர் சுயஉதவிக் குழு கடன் தவணைகளை நிறுத்திவைக்க வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.