சென்னையில் கொரோனா நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் சென்னைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது. காட்டுத்தீ போல் அதிகரித்து வரும் தொற்றால் சென்னை ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம் ஆகிய அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஒருபக்கம் சென்னையில் நாளை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளதால், சொந்த ஊரை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில் கொரோனா நோயாளிகளை 5 நாட்களில் குணமடைய வைக்கும் அற்புத மருந்து இருப்பதால் சிகிச்சை மையங்களில் சித்த மருத்தை அனுமதிக்க வேண்டுமென பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோயை சித்த மருத்துவத்தின் மூலம் 5 நாட்களில் நலமாக்கி சாதனை படைத்து  இருப்பதாகவும், கொரோனா மையங்களை தங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தால் குறுகிய காலத்தில்  நோயாளிகளை குணப்படுத்திக் காட்டுவதாகவும் சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது அரசு பரிசீலிக்கப்பட வேண்டிய யோசனையாகவே தோன்றுகிறது”

 

இதையும் படிங்க: சுஷாந்த் மரணத்தால் சிக்கலில் மாட்டிய சோனம் கபூர்...பச்சை பச்சையாக குவியும் கமெண்ட்களால் எடுத்த அதிரடி முடிவு!

“தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சித்த மருத்துவத்தில் ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 160 பேரை 5 நாட்களில் நலமாக்கி இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குனர் மீனாகுமாரி தெரிவித்திருக்கிறார். சித்த மருத்துவ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் மொத்தம்  3 வகையான சித்த மருந்து கலவைகளை உருவாக்கி இருப்பதாகவும், அவற்றை கொரோனா தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தலாம்; கொரோனாவை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அம்மருந்துகளை பயன்படுத்தியதில் இரு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்த 160 பேரும், புழல் சிறையில் பாதிக்கப்பட்டிருந்த 23 கைதிகளும் இதுவரை இல்லாத வகையில் 5 நாட்களில் குணமடைந்துள்ளனர். இது ஒரு மருத்துவ அதிசயம் என்றால் மிகையில்லை”

“தேசிய சித்த மருத்துவ நிறுவனம் பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சியால் தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்த போது தான் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 2009-ஆம் ஆண்டில்  தமிழகத்தில் பரவிய பன்றிக் காய்ச்சலை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தயாரித்து வழங்கிய கபசுரக் குடிநீர் தான் பெருமளவில் கட்டுப்படுத்தியது. 2012-ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் பரவிய போது, அதைக் குணப்படுத்த தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தயாரித்த நிலவேம்புக் குடிநீரை காய்ச்சிக் குடிக்கும்படி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டார். அந்த வகையில் பார்க்கும் போது தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசு கண்டுகொள்ளாமல் கடந்து போகக் கூடிய ஒன்றல்ல. மாறாக கவனத்தில் கொண்டு பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்” 

 

“சென்னையில் நேற்றைய நிலவரப்படி 35,556 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குணமடைந்தவர்கள் தவிர 16,067 பேர் இன்னும் மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மையங்களில் நவீன மருத்துவத்துடன் கபசுரகுடிநீர் உள்ளிட்ட சித்த மருந்துகளையும் இணைத்து தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்த முறையில் ஒருவர் குணமடைய சராசரியாக 14 நாட்கள் ஆகின்றன. ஆனால், சித்த மருத்துவ முறையில் 5 நாட்களில் நோயாளிகள் குணமடைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த முறையை கடைபிடிப்பதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயர்களை விரைவாக குணப்படுத்தி, சென்னையை கொரோனா வைரஸ் நோய் இல்லாத நகரமாக மாற்ற முடியும்.”


“சீனா கொரோனா வைரஸ் நோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து விரைவாக மீண்டு வருவதற்கு துணை நின்றது பாரம்பரிய சீன மருத்துவ முறை தான். சென்னையில் இப்போதும் சில கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் வழங்கப்படுகிறது. அந்த மையங்களில் உள்ளவர்கள் மற்ற மையங்களில் உள்ளவர்களை விட விரைவாக குணமடைந்து வீடு திரும்புகின்றனர். கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் எடுத்துக் கொள்ள விருப்பமா? என்று பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவர்கள் கேட்ட போது, பெரும்பான்மையினர் அதற்கு ஆர்வத்துடன் விருப்பம் தெரிவித்துள்ளனர்.”


“கொரோனா வைரஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா நோய்க்கு தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனம் கண்டுபிடித்துள்ள சிகிச்சை முறை நிரூபிக்கப்பட்டது என்பதால் அதை பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான மக்களை விரைவாக குணப்படுத்த வேண்டும். இந்த சிகிச்சை முறை வெற்றி பெற்றால் உலக அளவில் தமிழர்களின் மருத்துவ முறைக்கு பெரும் புகழும், அங்கீகாரமும் கிடைக்கும்.”


“எனவே, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தையும் தமிழக அரசு இணைத்துக் கொள்ள வேண்டும். அந்த நிறுவனம் கோருவதைப் போல அனைத்து கொரோனா மையங்களையும் சித்த மருத்துவத்திற்காக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை. மாறாக, முதலில் சில ஆயிரம் படுக்கைகளை  ஒப்படைக்கலாம்; அதன்பின் மருத்துவம் அளிப்பதில் ஏற்படும் முன்னேற்றம், நோயாளிகளின் விருப்பம் ஆகியவற்றை பொறுத்து இந்த எண்ணிக்கையை அதிகரிக்கலாம். கொரோனாவை நலமாக்குவதில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்காற்றும் நிலையில் அதை பயன்படுத்திக் கொள்ள அரசு முன்வர வேண்டும் என்றார்.”