தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க திமுகவும் காங்கிரசும் கூட்டணி சேர்ந்துள்ளன. அந்த கூட்டணியில் இணைய மதிமுக - விசிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் காத்திருக்கின்றன. இக்கட்சிகளுடன் திமுக. தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சு நடத்தப்படவில்லை. ஆனால் தொகுதிகள் கிட்டத்தட்ட முடிவாகிபிட்டதாக சொல்கிரார்கள். 

அதேபோல அதிமுக - பிஜேபி கூட்டணி இறுதிகட்டத்தில் உள்ளது. இவ்விரு கட்சிகள் இடையே பல கட்டமாக ரகசிய பேச்சு நடந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக. - தேமுதிக.  கூட்டணிக்குள் கொண்டுவர 
மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார். அப்போது பிஜேபி தரப்பில் 10 தொகுதிகள் கேட்கப்பட்டு உள்ளது. பாமக - 5; தேமுதிக - 4 கேட்பது பற்றியும் பேசப்பட்டு உள்ளது. பிஜேபிக்கான 10 தொகுதிகளில் புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தரப்பில் இதற்கு உடன்படவில்லை. தாங்கள் 25 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் மிச்சமிருக்கும் 15 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு  தர விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக எந்தெந்த தொகுதிகள் யாருக்கு என்ற பேச்சும் எழுந்துள்ளது. அதில் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாமக - தேமுதிக தரப்பில் கேட்கப்பட்டுள்ள தொகுதிகள் விபரம் பியுஷ் கோயலிடம் தெரிவிக்கப்பட்டது. அதில் இரு கட்சிகளும் வட மாவட்டங்களில் சம பலம் அதாவது சமமான வாக்கு வங்கி உள்ளதால், குறிப்பிட்ட தொகுதிகளே வேண்டும் என கேட்பது தெரியவந்துள்ளது. அதேபோல அதிமுகவும், பிஜேபி கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகள் தங்களுக்கே வேண்டும் என விரும்புவதால் தொகுதிகளை அடையாளம் காண்பதில் இழுபறி நிலவுகிறது.

இதற்கிடையில் தமிழகத்தில் ஐந்து தொகுதிகளுடன் புதுச்சேரியும் வேண்டும் என பாமக வலியுறுத்துவதாக தெரிகிறது. இந்த கூட்டணியில்  ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் சேர்கிறது. அக்கட்சிக்கு புதுச்சேரியை ஒதுக்க அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது. இதுவும் சிக்கலுக்கு மற்றொரு காரணம். இதையடுத்து முதல் கட்டமாக அதிமுக - பிஜேபி இடையே கூட்டணியை உறுதி செய்த நிலையில் மற்ற கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து விட்டு தொகுதி பங்கீடு பற்றி அடுத்த கட்டமாக பேச முடிவு செய்யப்பட்டு உள்ளது.