ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல்லாயிரக்கணக்கானவர்களால் விண்ணப்பம் செய்ய முடியவில்லை.
பி.எட். பட்டப் படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் விண்ணப்பிக்க முடியவில்லை. சர்வர் பிரச்சினை, கால அவகாசம் போதாமையால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.கடந்த காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், இம்முறை சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க வசதியாக நாளை 18-ஆம் தேதி முதல் இரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் கடந்த மாதம் 13ம் தேதி பட்டதாரி மற்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. இந்த தேர்வு முதல் , இரண்டாம் தாள் எனும் வகையில் நடைபெறும். டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் முதல் தாள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இரண்டாம் தாள் தேர்வினை எழுதலாம். முதல் மற்றும் இரண்டாம் தாளில் 150 வினாக்கள் இடம்பெறும். இதில் பெரும்பாலும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவுகள் கடந்த ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வு இணையதளத்தில் சர்வர் பிரச்சனை காரணமாக பலரால் விண்ணபிக்க முடியவில்லை. ஒரே நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முயற்சித்ததால், சர்வர் கோளாறு ஏற்பட்டதாகவும், எனவே அந்த பேண்ட்வித் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்தது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி தான் பி.எட் இறுதியாண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதால், விண்ணபிக்கக் கூடுதல் அவகாசம் வேண்டுமென்று சில தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
