வருகிற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. மேலும் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டக்கூடாது என கடுமையாக விமர்சித்து வந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி தற்போது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். 

இந்த கூட்டணி விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டதற்கு என்ன காரணம் என அன்றைய தினமே ராமதாஸ் விளக்கிய போதிலும், பாமகவில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவுடனான கூட்டணி ஏன்? என்ற கேள்விகளுக்கு விளக்கமளித்தார். 

இது குறித்தே மற்ற செய்தியாளர்களும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் வழங்கி, பல்வேறு திட்டங்கள் குறித்தும் விமர்சித்த பாமக இப்பொழுது அதிமுகவிடம் கூட்டணி வைத்தது ஏன்? குட்கா ஊழல் உட்பட அமைச்சர்கள் மீதான பல்வேறு ஊழல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அன்புமணி திணறினார்.

 

ஒரு கட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அன்புமணி கடும் கோபமடைந்தார். அதிமுக- திமுகவுடன் கூட்டணி வைப்பதை கொச்சையாக விளக்கிய நீங்கள் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? என  செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியை எதிர்க்கொள்ள முடியாமல் தவித்த அன்புமணி, சற்று தடுமாறி,  ”அவருக்கு தண்ணி கொடுங்கப்பா” ரொம்ப ஆவேசமா இருக்காரு...’ என சிரித்து மழுப்பினார்.