கருணாநிதி, ஜெயலலிதா ஆதிக்கம் செலுத்திய காலத்தில் களத்தில் இறங்கி சாதித்தவர் விஜயகாந்த் - மோடி புகழாரம்!!
2014 தேர்தல் வெற்றிக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் என்னை சந்தித்தபோது, விஜயகாந்த் அடைந்த மகிழ்ச்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது என மோடி புகழாரம் சூற்றியுள்ளார்.
விஜயகாந்த் மறைவு- மோடி புகழாரம்
தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் சமூக வலைதளத்தில் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில், சில நாள்களுக்கு முன்னதாக நாம் பெரிதும் போற்றப்படும், மதிக்கப்படும் தலைவர் விஜயகாந்த்தை இழந்தோம்.
அவர் அனைவருக்கும் கேப்டனாக இருந்தார். மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை வாழ்ந்தவர். தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் எனது நெருங்கிய நண்பராக இருந்தார். அவருடன் பல்வேறு தருணங்களில் நெருக்கமாக உரையாடியும், பணியாற்றியும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படமும் விஜயகாந்த் கதாப்பாத்திரமும்
தமிழ் திரைப்படங்களில் கேப்டன் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களும் அவற்றை அவர் பிரதிபலித்த விதமும் சாதாரண குடிமக்களின் போராட்டங்களைப் பற்றிய அவரது ஆழமான புரிதலை எடுத்துக்காட்டியது. ஊழல், அநீதி, வன்முறை, தீவிரவாதம், பிரிவினைவாதம், ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிய கதாபாத்திரங்களில் அவர் அடிக்கடி தோன்றினார். அவரது திரைப்படங்கள் சமூகத்தில் நிலவும் தீமைகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்கியது.
விஜயகாந்த் பன்முக ஆளுமை கொண்டவராக இருந்தார். இந்திய திரையுலகில் விஜயகாந்தை போன்று சில நட்சத்திரங்கள் மட்டுமே அழியாத முத்திரையை பதித்துள்ளனர். அவர் புகழுக்காக சினிமா உலகில் நுழையவில்லை. அவரது பயணம் ஆர்வமும், விடாமுயற்சியும் கொண்டது. அவரது ஒவ்வொரு படமும் மக்களை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், ஆழமான சமூகநீதியை பதித்தது. திரையுலகில் ஏற்படுத்திய தாக்கத்தோடு நின்றுவிடாமல், அவர் அரசியலிலும் நுழைந்தார். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் களத்தில் இறங்கினார். தமிழகம் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் கல்வி மற்றும் மருத்துவத்தில் முன்னிலை பெற வேண்டும் என்பதில் எப்போதும் அவர் ஆர்வமாக இருந்தார்.
சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர்
தமிழக அரசியலில், 2011-ம் ஆண்டில், அவர் கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே, சட்டப் பேரவையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரானார். 2014 மக்களவைத் தேர்தலின் போது நான் கேப்டனுடன் பணிபுரிந்தேன், அப்போது எங்கள் கட்சிகள் ஒரு கூட்டணியில் போட்டியிட்டு 18.5% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றன - 1989 தேர்தலுக்குப் பிறகு எந்தவொரு முக்கிய பிராந்திய கட்சிகளும் இடம் பெறாத தேசிய கூட்டணி பெற்ற அதிகபட்ச வாக்கு சதவிகிதம் இதுவாகும்! சேலத்தில் நாங்கள் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் அவரது ஆவேசமான உரையையும் மக்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பையும் நான் கண்கூடாக கண்டேன்.
நிரப்ப முடியாத இடம்
2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்த மக்களில் அவரும் ஒருவராக இருந்தார். 2014 தேர்தல் வெற்றிக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் என்னை சந்தித்தபோது, அவர் அடைந்த மகிழ்ச்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. விஜயகாந்தின் மறைவால் பலர் அவர்களது தலைவரை இழந்துள்ளனர். ஆனால், நான் எனது நெருங்கிய நண்பரை இழந்துள்ளேன். நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செனறுள்ளதாக மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்