பாஜக அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த முதல்வர் சந்திரசேகர ராவ், தேர்தல் காலத்தில் பிரதமர் மோடி அணியும் உடைப் பற்றியும் மிகக் கடுமையாக விமர்சித்தார். 

மேற்கு வங்காளம், பஞ்சாப்பைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் மோடியை வரவேற்காமல் தவிர்த்தார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஸ்ரீராமானுஜர் சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று வருகை புரிந்தார். பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வரும்போது மாநில அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். முதல்வர் விமான நிலையம் சென்று வரவேற்பது ஒரு மரபாகும். ஆனால், அண்மைக் காலமாக டி.ஆர்.எஸ். கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஹுசுராபாத் இடைத்தேர்தலில் பாஜகவிடம் டி.ஆர்.எஸ். தோல்வியடைந்த பிறகு மோதல் போக்கு அதிகரித்துவிட்டது. அடுத்த ஆண்டு டிசம்பரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - டி.ஆர்.எஸ். இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பாஜக அரசின் பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த முதல்வர் சந்திரசேகர ராவ், தேர்தல் காலத்தில் பிரதமர் மோடி அணியும் உடைப் பற்றியும் மிகக் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் ஹைதரபாத் வரும் பிரதமர் மோடியை வரவேற்க செல்ல மாட்டேன் என்று சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஹைதரபாத் வந்த மோடியை வரவேற்க விமான நிலையத்துக்கு சந்திரசேகர ராவ் செல்லவில்லை. சந்திரசேகர ராவின் இந்த நடவடிக்கைக்கு தெலங்கான பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த மாதம் பஞ்சாப்புக்கு பிரதமர் மோடி சென்றபோது அவரை வரவேற்க விமான நிலையம் செல்லாமல் முதல்வர் சரண்ஜீத் சிங் தவிர்த்தார். தொடர்ந்து பிரதமரின் பயண தடத்தில் எழுந்த பாதுகாப்பு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது தெலங்கானா முதல்வரும் சேர்ந்திருக்கிறார். கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக கொல்கத்தா வந்த பிரதமர் மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்க செல்லாமல் தவிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.