PM Modi top quotes I sold tea not the nation
நான் ஏழ்மையான காலத்தில் டீ தான் விற்பனை செய்தேன், நாட்டை விற்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர்தான் ஏழைகளுக்கு விரோதமானவர்கள். நான் ஏழை என்பதால், என்னை எப்போதும் அவமதித்து வருகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்தார்.
சட்டசபைத் தேர்தல்
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 4 , 9 ந்தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜனதா கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும், கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அனல்பறக்க பிரசாரம் செய்து வருகின்றனர்.
கிண்டல் ‘மீம்ஸ்’
சமீபத்தில் மோடி சிறுவயதில் டீ விற்பனை செய்தது குறித்து காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பினர் ‘மீம்ஸ்’ வெளியிட்டு பிரசாரம் செய்தனர். இதற்கு பா.ஜனதா கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராஜ்கோட் நகரில் பா.ஜனதா கட்சிக்கு வாக்குக் கேட்டு, பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து அவர் பேசியதாவது-
அவமதிப்பு
காங்கிரஸ் கட்சியினருக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஏனென்றால், நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு கட்சி இதற்கு மேல், தரம்தாழ்ந்து போக முடியுமா?. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் பிரதமராக வந்துவிட்டார் என்பதற்காக அந்த கட்சியினர் என்னை வெறுக்கிறார்கள்.
நான் ஏழை என்பதற்காக என்னை அவமதிப்பு செய்து வருகிறார்கள். நான் ஏழ்மை காலத்தில் டீ தான் விற்பனை செய்தேன். ஆனால், நாட்டை விற்பனை செய்யவில்லை.
ஏழைகளை கிண்டல் செய்யாதீர்கள்
கடந்த இரு மாதங்களாக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் என் மீது அவதூறுகளையும், பொய்யான பிராசரங்களையும் அரசியல் ஆதாயத்தோடு பரப்புகிறார்கள். நான் அந்த கட்சியினரை கேட்பதெல்லாம், ஏழைகளை கிண்டல் செய்யாதீர்கள், குஜராத்தின் மகனை(மோடி) கிண்டல் செய்யுங்கள் என்பதுதான்.
துணிச்சல் இருக்கா?
குஜராத்தின் மகனான எனக்கு பொது வாழ்க்கையில் எந்த விதமான ஊழல் கறையும் இல்லை. உங்களுக்கு துணிச்சல்(காங்கிரஸ்) இருந்தால், குஜராத்துக்கு வந்து, மண்ணின் மைந்தனான எனக்கு எதிராக பேசுங்கள்?. இந்த குஜராத் மகனுக்கு எதிராக நீங்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு இந்த மக்கள் உங்களை மன்னிப்பார்களா?. எந்த குஜராத் மக்களும் இதை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.
காமராசர் நினைவு இருக்கிறதா?
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, அந்த கட்சி ஒரு குடும்பத்தை தவிர்த்து சிந்திக்க முடியாது. குஜராத்தும், அதன் தலைவர்களும் தொடர்ந்து தேசிய அரசியலில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சர்தார் படேலை மட்டும் அவமானப்படுத்தவில்லை, மொரார்ஜி தேசாயைக் கூட புறந்தள்ளிவிட்டது. ஏனென்றால், அவர் குஜராத் மண்ணில் பிறந்தவராயிற்றே. காங்கிரஸ் கட்சியில் எத்தனை பேர் இன்னும் காமராஜரையும், தேபர்பாயையும் நினைவு வைத்துள்ளார்கள்?. தேசிய அளவில் யார் தலைவர்களாக இருந்தார்கள்?.
வாரிசுக்கும், வளர்சிக்கும்போட்டி
காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தைத் தவிர்த்து எங்கும் சென்றதில்லை. அவர்களிடம் இருந்து எதை நீங்கள் எதிர்பார்க்க முடியும்?. என் மாநிலத்தில் நடக்கும் தேர்தல் என்பது, வளர்ச்சிக்கும், வாரிசு அரசியலுக்கும் இடையே நடக்கும் போட்டியாகும்.
இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு வளர்ச்சி ஒன்றுதான். எந்த விதமான பாகுபாடுமின்றி குஜராத் மக்களுக்கு சேவை செய்து இருக்கிறோம். குஜராத் மக்களுக்கு பணியாற்றுவோம், தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறோம்.
காங்கிரஸ் கட்சி சமூக கட்டமைப்பை குஜராத் மாநிலத்தில் சிதைத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் பிரித்தாளும் அரசியலில் மக்கள் விழுந்துவிடக்கூடாது, வளர்ச்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
