திமுக எம்பிக்கள் மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் பிரதமர் மோடி கொடுத்த அப்பாய்ன்ட்மென்ட் தமிழக அரசியலில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களை போல் தற்போதைய பிரதமர் அலுவலகம் செயல்படுவதில்லை. பிரதமராக மன்மோகன் சிங் இருந்தது வரை எம்பிக்களுடனான சந்திப்பு மற்றும் அவர்கள் அப்பாய்ன்ட்மென்ட் கேட்டால் கொடுப்பதற்கு என்று ஒரு புரோட்டகால் இருந்தது. அதன்படி, எம்பிக்கள் எதற்காக சந்திக்க வேண்டும், எவ்வளவு நேரம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் பிரதமர் அலுவலத்திலோ அல்லது நாடாளுமன்ற கட்டிடத்திலோ சந்திப்பு நடைபெறும்.

ஆனால் மோடி பிரதமரான பிறகு எம்பிக்களுக்கு என்று பிரத்யேகமாக அப்பாய்ன்ட்மென்ட் கொடுப்பதில்லை. ஏதேனும் மிக முக்கியமான விஷயம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் என்றால் மட்டும் தான் பிரதமரை, எம்பிக்கள் சந்திக்க முடியும். பாஜக எம்பிக்களுக்கு பிரதமரை தனியாக சந்திக்கும் வாய்ப்பு என்பதே கிடையாது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறம் எம்பிக்கள் கூட்டத்தில் மோடியை எட்ட நின்னு பார்ப்பதோடு சரி.

அதே சமயம் ஒரு அரசியல் கட்சியின் தலைவர், பிரபலமான எம்பி என்றால் சில புரோட்டோகால் அடிப்படையில் மோடி சந்திப்பது வழக்கம். ஆனால் இந்த வழக்கம் அரிதினும் அரிதானது. அப்படி அரிதாக நிகழ்ந்துள்ளது தான் திமுக எம்பிக்கள் மோடியை சந்தித்திருப்பது. தமிழகம் தொடர்பான கோரிக்கை மனுவுடன் பிரதமரை சந்திக்க பல மாதங்களுக்கு முன்னரே திமுக தரப்பில் இருந்து அப்பாய்ன்ட்மென்ட் கோரப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென தற்போது தான் அந்த அப்பாய்ன்மென்டை உறுதிப்படுத்தி சந்திப்பை நிகழ்த்தியுள்ளது பிரதமர் அலுவலகம். திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர் பாலுவுக்கு தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் சென்றுள்ளது. அந்த தகவலை மின்னல் வேகத்தில் ஸ்டாலினிடம் சொல்ல, கனிமொழி மற்றும் திருச்சி சிவாவை அழைத்துச் செல்லுமாறு ஸ்டாலின் கூற, டெல்லியில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

மு.க.ஸ்டாலின் உடல் நலம் குறித்து மோடி, அக்கறையாக கனிமொழியிடம் விசாரித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. கனிமொழி, திருச்சி சிவா கூறியதை மோடி பொறுமையாக கேட்டதாக சொல்கிறார்கள். மோடியுடனான சந்திப்பு பாசிட்டவாக இருந்தது என்று பாலு கூறியதை தொடர்ந்து ஸ்டாலின் அவசரமாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதாவது திமுக எம்பிக்கள் டெல்லியில் மோடியை சந்தித்து கொடுத்த கடிதம் தான் எழுதியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. திடீரென மோடி திமுக எம்பிக்களை சந்தித்ததும், அதனை திமுக விளம்பரப்படுத்துவதும் ஏன் என்று தமிழக அரசியல் களத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது.