காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகள் பதவி வெறி பிடித்து அதிகாரத்துக்காக முயற்சிக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார். 
ஜார்கண்டில் 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வரும் 30 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. ஜார்கண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்டில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். டால்தோன்கஞ்ச் என்ற் இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
“மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்து கொள்ளையடிப்பதில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்திவந்தது. ஆனால், பாஜக அரசு அமைந்த பிறகுதான் வளர்ச்சியை மக்கள் அனுபவித்துவருகிறார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள உயர்ந்த ஆதார மூலங்களை காங்கிரஸ் கொள்ளையடித்து விட்டது. ஆனால், பாஜகவோ மக்களின் நலனை மட்டுமே சிந்திக்கிறது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, அயோத்தி விவகாரம் போன்ற பிரச்னைகளில் காங்கிரஸ் கட்சி எப்போதோ தீர்வு கண்டிருக்கலாம்.


ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தப் பிரச்னைகள் எல்லாம் தொடர்ந்து இருக்கும்படி காங்கிரஸ் கட்சி பார்த்துக்கொண்டது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி அமையும்போதுதான் மாநில மக்களுக்கு நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும். இதை உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் செயல்படுத்த மறுக்கின்றன.


காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் பதவி வெறி பிடித்து ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக முயற்சிக்கின்றன. இது மக்கள் மீதான அக்கறையால் நடக்கவில்லை. தங்களுடைய சுயநலத்துக்காக அந்தக் கட்சிகள் அலைகின்றன” என்று பிரதமர் மோடி பேசினார். மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடிப்பதில் அடுத்தடுத்து நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. ஆளுநர் மூலம் பாஜக ஆட்சியைப் பிடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பதவி வெறி பிடித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.