Asianet News TamilAsianet News Tamil

பாரதியாரை தன் மனதின் குரலில் நினைவு கூர்ந்த மோடி!

pm modi recalls subramania bharathi in his mann ki baat radio program
pm modi recalls subramania bharathi in his mann ki baat radio program
Author
First Published Oct 29, 2017, 11:06 PM IST


பிரதமர் மோடி வானொலி நேயர்களுடன் உரையாடும் மன் கி பாத் - மனதின்குரல் நிகழ்ச்சியில் இன்று பேசும்போது, தமிழ்க் கவி சுப்பிரமணிய பாரதியை மேற்கோள் காட்டி, பெண் விடுதலை குறித்துப் பேசினார். 

அவரது வானொலி உரையில்... நமது புண்ணியபூமியை பல மஹாபுருஷர்கள் அலங்கரித்திருக்கிறார்கள், இவர்கள் தன்னலமற்ற உணர்வோடு மனித சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  சகோதரி நிவேதிதை கூட அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்திகழ்ந்தார்.  அவர் அயர்லாந்தில் மார்கக்ரெட் எலிஸபெத் நோபலாகப் பிறந்தாலும், ஸ்வாமி விவேகானந்தர் அவருக்கு ‘நிவேதிதை’ என்ற பெயரைச்சூட்டினார்.  

நிவேதிதை என்றால் முழுமையாக அர்ப்பணித்தவர் என்று பொருள்.  பின்வரும் காலத்தில் அவர் தனது பெயருக்கு ஏற்ப, தன்னையே அர்ப்பணித்தார்.  நேற்று சகோதரி நிவேதிதையின் 150ஆவது பிறந்த நாள்.  இவர் ஸ்வாமி விவேகானந்தரால் மிகவும் ஈர்க்கப்பட்டு, தனது சுகமான வாழ்வைத் துறந்து, தனது வாழ்க்கை முழுவதையும் ஏழைகளின் சேவையிலேயே முற்றிலுமாக அர்ப்பணித்தார்.  சகோதரி நிவேதிதை ப்ரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்று வந்த அநியாயங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டார்.  

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மட்டும் அடிமைப்படுத்தவில்லை, அவர்கள் நம்மை மனதளவில் அடிமைகளாகவே வைத்திருக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவந்தார்கள்.  நமது கலாச்சாரத்தை இழிவானதாகக்காட்டி, நம் மனங்களில் தாழ்வு உணர்வை ஏற்படுத்தும் வேலை தொடர்ந்து நடைபெற்றுவந்தது.  சகோதரி நிவேதிதை பாரத கலாச்சாரத்தின் கௌரவத்தை மீண்டும் நிறுவினார்.  தேசத்தின் விழிப்புணர்வை எழுப்பி மக்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார்.  அவர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சனாதன தர்மம் மற்றும் தத்துவங்கள் ஆகியவை பற்றிய தவறான பிரச்சாரங்களுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்தார்.  

புகழ்பெற்ற தேசியவாதியும் தமிழ்க்கவியுமான சுப்ரமணிய பாரதி புதுமைப்பெண் என்ற புரட்சி ததும்பும் கவிதையில், புதுயுகப்பெண்டிர் பற்றியும் அவர்களின் சரிநிகர் சமநிலை குறித்தும் விளக்கி இருக்கிறார்.  இந்தக் கவிதைக்கான உத்வேகம் அவருக்கு சகோதரி நிவேதிதையிடமிருந்து தான் கிடைக்கப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.  சகோதரி நிவேதிதை மகத்தான விஞ்ஞானி ஜக்தீஷ்சந்த்ர போஸுக்கும் உதவி செய்திருக்கிறார்.  

அவர் தனது கட்டுரை மற்றும் மாநாடுகள் வாயிலாக போஸ் அவர்களின் ஆய்வைப்பிரசுரிக்கவும், பரப்பவும் ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார். ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றை ஒன்று நிறைவு செய்வது என்பது பாரதத்தின் பல அழகான சிறப்பம்ஸங்களில் ஒன்று.  சகோதரி நிவேதிதையும், விஞ்ஞானி ஜக்தீஷ் சந்த்ர போஸும் இதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு.  

1899ஆம் ஆண்டில், கோல்காத்தாவில் பயங்கரமான ப்ளேக் நோய் ஏற்பட்டது, இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள்.  சகோதரி நிவேதிதை, தனது உடல்நலத்தைப் பற்றி சற்றும் பொருட்படுத்தாது, கால்வாய்களையும் தெருக்களையும் சுத்தம் செய்யும் பணியைத் தொடக்கிவைத்தார்.  அவர் சுகவாழ்வு வாழ்ந்திருக்கலாம் ஆனால், அவர் ஏழைகளின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.  அவரது இந்தத் தியாகத்திலிருந்து உத்வேகம் பெற்று, மக்கள் சேவைப்பணிகளில் தங்கள் பங்களிப்பை நல்கத்தொடங்கினார்கள்.  அவர் தனது பணிகள் வாயிலாக தூய்மை மற்றும் சேவையின் மகத்துவம் பற்றிய பாடத்தைக் கற்பித்தார்.  

Here reposes Sister Nivedita who gave her all to India, அதாவது அனைத்தையும் பாரதத்திற்காக அர்ப்பணித்த சகோதரி நிவேதிதை இங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கிறது.  ஐயமே இல்லாமல் அவர் இப்படித்தான் வாழ்ந்தார்.  இந்த மகத்தான ஆளுமையின் பொருட்டு, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், அவரது வாழ்க்கையிலிருந்து படிப்பினை பெற்று, தன்னை அந்த சேவைப் பாதையில் ஈடுபடுத்திக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதை விடச் சிறப்பான நினைவஞ்சலி, இன்று வேறு ஒன்று இருக்க முடியாது. - என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios