சுதந்திர தினம் அன்று தன்னுடைய உரையில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று பொதுமக்கள் தெரியப்படுத்தலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் 6-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி உரை நிகழ்த்த உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் இரண்டாவது முறையாகத் தேர்தலில் வெற்று பெற்று பிரதமரானதால், இந்தச் சுதந்திர தின உரையில் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார்.
அதன்படி ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பேசும்போது, அந்த உரையில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து மக்கள் பரிந்துரைக்கலாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தன்னுடைய பேச்சில் நாட்டின் 130 கோடி மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
 சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய கருத்துகளை நமோ செயலியில் பரிந்துரைக்கலாம் எனப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.