ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வந்து கொண்டிருக்கின்றன. கழுகு பார்வையில் பார்க்கும்போது பி.ஜே.பி. மிக வலுவான சரிவை சந்திக்க துவங்கியுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. 

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்திஸ்கர் என மூன்று மாநிலங்களில் மோடியை விட ராகுலின் கை செமத்தியாக ஓங்கி நிற்கிறது. ராஜஸ்தானாவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் பி.ஜே.பி. பெரிதாய் நம்பிக்கை வைத்திருந்த மத்தியபிரதேசத்திலும் பிய்த்துக் கொண்டு விழுகிறது வாய்ப்பு. ஐந்திலும் பி.ஜே.பி.யின் நிலைமை கவலைக்கிடமாகதான் இருக்கிறது.  

வடக்கில் வீசும் இந்த காங்கிரஸ் காற்று தெற்கில் பெரும் விளைவுகளை கிளப்பியுள்ளது. மோடிக்கு எதிராக முஸ்டி முறுக்கி நிற்கும் நாயுடு தாளமுடியாத சந்தோஷத்தில் இருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் ஒரு வகையில் நிம்மதிதான். என்னதான் காங்கிரஸ் ஆகாது என்றாலும் கூட பரம விரோதியான பி.ஜே.பி. சரிவதில் சந்தோஷமே. 

அதேவேளையில் தமிழ்நாட்டை எட்டிப் பார்த்தால் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் எடப்பாடியார் கண்களில் கலவர பீதி தெறிக்கிறது. ஒட்டு மொத்த அமைச்சரவையும் ஏதோ கஜாவில் சிக்கிய குடும்பம் போல் பரிதவித்து நிற்கின்றன. காரணம்? மெஜாரிட்டி இல்லாமல் எப்பவோ கவிழ்ந்திருக்க வேண்டிய இந்த ஆட்சியை தன் முட்டுக் கொடுத்து ஓட வைத்துக் கொண்டிருப்பது பி.ஜே.பி.தானே! ஜெ., மரணத்துக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் டீம் தி.மு.க.வுடன் கைகோத்து ‘நம்பிக்கையில்லா தீர்மானம்’ கொண்டு வந்தபோதே கவிழ்ந்திருக்க வேண்டும் இந்த ஆட்சி! தினகரனின் பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் சென்றபின் ஏற்பட்ட விளைவுகளின் மூலமும் இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும்.

 

ஆனால் அப்போதெல்லாம் தூக்கிபிடித்து தோள் கொடுத்தது பி.ஜே.பி.தானே! பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பு சபாநாயகர் தரப்புக்கு சாதமாக வந்ததை ஓய்வுபெற்ற நீதிபதிகளே ‘வாய்ப்பே இல்லை’ என்று விமர்ச்கிக்குமளவுக்கு இருந்தது. அதற்கு காரணமும் டெல்லி லாபிதானே! ஆக எப்போதோ மாஜி ஆகியிருக்க வேண்டிய எடப்பாடி அண்ட்கோவை இன்னமும் ஹீட்டில் வைத்திருப்பது பி.ஜே.பி.யின் செல்வாக்கு மட்டுமே. 

மோடி இதை செய்வதற்கு முழுக்க முழுக்க சுயநலன் தான் காரணம் என்றாலும் கூட, இங்கே ஆட்சியரியணையில் இருப்பதன் மூல ஏகப்பட்ட அதிகார ஆதாயங்களை எடப்பாடி, பன்னீர் மற்றும் அமைச்சரவை படைபரிவாரஙக்ள் அனுபவிக்க அடிப்படை காரணம் மோடியின் அதிகாரம் தானே. அந்த மோடிக்கே சரிவென்றால், தங்கள் ஆட்சி எப்படி நிலைக்கும்? என்றுதான் பெரும் கவலையில் உட்கார்ந்துவிட்டது தமிழக அமைச்சரவை. 

இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவை இன்னும் ஐந்தே மாநிலங்களில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகதான் தேசமே பார்க்கிறது. இப்போது பி.ஜே.பி. தோற்றால் அது நிச்சயம் மக்களவை தேர்தலிலும் தொடரும்! என்பதே பொதுவான பார்வை. தேசத்தை கைபற்றுவதில் மோடி தோற்று, தி.மு.க. பெரும் அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அது எடப்பாடியின் ஆட்சிக்கு எமகண்டமாகதான் அமையும்! என்பதில் இரண்டாம் கருத்தே இல்லை. இதை நினைத்துதான் கலங்குது அ.தி.மு.க. அமைச்சரவை.