சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை அதிமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். இதற்காக தமிழமெங்கும் ஜெயலலிதாவின் பிளக்ஸ் போர்டுகளை வைத்து அஞ்சலியும் செலுத்தி வருகிறார்கள். சென்னையில் அதிமுக தலைமையகத்திலும் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக தலைமை அலுவலகத்தின் பின்புறம் உள்ள தூணில் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் இடம்பெற்றுள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கோரிக்கை மனு தருவது போன்ற அந்தப் புகைப்படம் உள்ளது. இதேபோல வாஜ்பாயுடன் ஜெயலலிதா இருக்கும் புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாஜக போட்டியிடுகிறது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி அமைந்த காரணத்தால் வாஜ்பாய் மற்றும் மோடியுடன் ஜெயலலிதா இருக்கும் படம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், இந்தப் புகைப்படங்களை அதிமுக வைத்தது சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை பா.ஜ.க.த்தான் இயக்கி வருவதாகப் பலரும் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், அதை இன்றைய ஆட்சியாளர்கள் நிரூபித்துகாட்டியிருக்கிறார்கள் என்று சமூக ஊடங்களில் வறுத்தெடுத்துவருகிறார்கள். ஆனால், கடந்த காலத்தில் நரசிம்மராவுடன் இருக்கும் புகைப்படம் அதிமுக தலைமை கழகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்று அதிமுக தரப்பில் பதில் அளிக்கப்படுகிறது.