இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையாரின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் நலம் குறித்தும் விசாரித்துள்ளார். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின் பிரதமரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்திருக்கிறார்.

பிரதமர் மோடியுடன் பேசிய ஸ்டாலின் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி ஆர் பாலு கலந்துகொள்வார் என்று தெரிவித்திருக்கிறார். தற்போது இந்தியாவில் நிகழ்ந்து இருக்கும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு நாட்டின் நிலைமை சீரடைய ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை திமுக சார்பாக அரசுக்கு வழங்குவோம் என்று கூறியிருக்கும் ஸ்டாலின்  மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மத்திய அரசு மிக கவனமாக செயல்பட்டு வருகிறது என்று உறுதியளித்திருக்கிறார். அதேபோல உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் திமுக தலைவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து இருக்கிறார்.