முதல்வர் பதவியில் வந்தமர்ந்த எடப்பாடியார் டீம் சசிகலாவையும், தினகரனையும் விலக்கி வைத்த பின் டி.டி.வி.க்கு மிக மிக அபரிமிதமாக செல்வாக்கு உருவாகியது. 

அ.தி.மு.க.வில் கட்சியிலும், ஆட்சியிலும் பதவி வகிக்கும் நபர்கள் ஆளும் அணியை ஆதரித்தார்கள், ஆனால் இந்த ஆதாயங்கள் எதையும் அனுபவிக்காதவர்கள் மிக வலுவாக டி.டி.வி.க்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். தனி ஒருவனாய் தடம் பதிக்க துவங்கிய டி.டி.வி., ஆர்.கே.நகர் தேர்தலில் தெறி வெற்றி பெற்றபோது அவருக்கான வரவேற்பு வெறித்தனமாய் எகிறியது. இந்த சமயங்களில், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இயங்கும் அ.தி.மு.க. அபிமானிகள் அடிக்கடி சர்வேவை நடத்துவார்கள். 

அதில் ’உங்களுக்கு பிடித்த தலைவர் யார்? அ.தி.மு.க.வின் நம்பிக்கை நட்சத்திரம் யார்? அடுத்த முதல்வர் யார்?’ என்பது போன்ற கேள்விகளை வைத்து அதில் எடப்பாடியார், பன்னீர்செல்வம், டி.டி.வி, தீபா போன்றோரின் படங்களையும் இணைத்து சர்வே நடத்துவார்கள். இந்த சர்வேயில் நூறு பேர் கலந்து கொண்டால் எழுபது பேரின் வாக்குகள் தினகரனுக்கு கிடைக்கும். எடப்பாடியார் பதினைந்து முதல் பதினெட்டு வாக்குகளை பெறுவார். மீதி பன்னீருக்கு செல்லும். யாராவது கிண்டலாக தீபாவை செலக்ட் செய்தால்தான் உண்டு. 

டி.டி.வி.க்கு வாக்களிப்பது மட்டுமில்லாமல் எடப்பாடியாரை மிக மோசமாக விமர்சித்து கமெண்டுகளும் வந்து விழும். சர்வே முடிவுகளைப் பார்க்கும்போது ஏதோ எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவே எழுந்து வந்து தினகரனை தங்களின் வாரிசாக அறிவித்த ரேஞ்சுக்கு கொண்டாடி இருப்பார்கள். ஆனால் சமீப காலமாக இதில் மாற்றங்கள் நிகழத் துவங்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக கடந்த ஒன்றரை, இரண்டு மாதங்களாக எடப்பாடியாருக்கு அ.தி.மு.க.வில் செல்வாக்கு கணிசமாக அதிகரித்திருப்பதாக சர்வே முடிவுகள் சொல்கின்றனவம். 

இதை விளக்கும் விமர்சகர்கள்...”அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகரித்திருப்பது உண்மையே. இதற்கு மிக முக்கிய காரணம், கூட்டணிக்கு வர்புறுத்தும் பி.ஜே.பி.யை முடிந்தளவுக்கு அவர் எதிர்த்து நிற்பதுதான். ‘மோடியின் அடிமைகள்’ அப்படின்னு வாங்கப்பட்ட பெயரால் சொந்த கட்சியில் மிக கடுமையான செல்வாக்கு சரிவை கண்டிருந்தது எடப்பாடியாரின் அமைச்சரவை. 

ஆனால் தம்பிதுரை, பொன்னையன் ஆகியோர் தொடர்ந்து பி.ஜே.பி.யை மிக மிக வன்மையாக எதிர்ப்பதன் பின்னணியில் எடப்பாடியாரின் முழு ஆசீர்வாதம், அனுமதி, தூண்டுதல் இருக்குதுன்னு ஆளுங்கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் நினைக்கிறாங்க. ‘அம்மா போல் துணிந்து நிற்க மெதுவாக துவங்கியுள்ளார்.’ அப்படின்னு வெளிப்படையாகவே பேசுறாங்க. இதுபோக கொடநாடு விவகாரத்தில் முதல்வரை இழுத்துவிட்டவர்கள், அதற்கு எந்த ஆதாரத்தையும் வெளியிடாததால் ‘ஜோடிக்கப்பட்ட புகார்’ அப்படின்னு கட்சிக்குள் கருத்து அலை உருவாகி, ‘பாவம் எடப்பாடியார்’ன்னு அவருக்காக உச் கொட்ட துவங்கியிருக்காங்க அந்த கட்சிக்காரங்க. இதுவும் எடப்பாடியாரின் செல்வாக்கை உயர்த்தியிருக்குது.

 

இதன் விளைவாக, கடந்த ஒரு வாரமா ‘இவரைப் பற்றி உங்கள் கருத்து? கழக சூப்பர் ஸ்டார் டி.டி.வி.யா அல்லது எடப்பாடியாரா?’ அப்படிங்கிற தலைப்புகள்ள நடக்குற சர்வேயில் எடப்பாடியாருக்கான ஆதரவு வாக்குகள் நல்லாவே அதிகரிச்சிருக்குது. நூறு பே கலந்து கொண்டால் அதில் நாற்பது பேருக்கு மேல் எடப்பாடியாரை செலக்ட் பண்றாங்க. மீது வாக்குகள் அப்படியே தினகரனுக்கு விழுதுதான். என்னதான் தினகரன் அதிக வாக்குகள் பெற்றாலும் கூட எடப்பாடியாருக்கான ஆதரவு விறுவிறுவென அதிகரிப்பதை மறுக்கவே முடியாது. 

இந்த தகவல் தினகரனின் காதுகளுக்கும் போக, நகம் கடிக்க துவங்கியிருக்கிறார். அதிலும் எடப்பாடியாருக்கு ஆதரவாக வந்து விழும் கமெண்டுகள், ‘விஷமிகளை விரட்டிய வீரனே! சூப்பர் முதல்வர்! எளிமை முதல்வர்!’ அப்படின்னெல்லாம் ஓவராய் புகழ்ந்திருக்காங்க. கடைசிவரை உறுதியாய் நின்று பி.ஜே.பி.யோடு கூட்டணி வைக்காமல் போயிட்டால், எடப்பாடியார்  தன் கட்சியில் ஜெயலலிதா அளவுக்கு செல்வாக்காகிடுவார். ஒருவேளை  பி.ஜே.பி.க்கு பணிஞ்சுட்டா இந்த ஆதரவு வாக்கு சதவீதம் மளமளன்னு குறைஞ்சுடும்! இது எடப்பாடியாருக்கு நல்லாவே தெரியும். என்ன பண்ணப்போறாரோ?” என்கிறார்கள். 

ஆக ’அ.தி.மு.க.வில் யார் சூப்பர்?’ எனும் போட்டியில் அந்த கட்சிக்குள்ளேயே இல்லாத தினகரனுக்கும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடியாருக்கும் இடையில்தான் போட்டி. அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான துணைமுதல்வர் பன்னீர்செல்வம் சீனிலேயே இல்லை என்பதை கவனிக்கணும். என்ன கொடும சார் இது!