கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட தலைவர்களின் கட்-அவுட்டுகளை அங்குள்ள விவசாயிகளை தங்கள் நிலங்களில் பறவைகளை விரட்ட பயன்படுத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக அதிக இடங்களில் ஜெயித்தாலும், ஆட்சி அமைக்கும் இளவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி தலைமையில், காங்கிரஸ் கட்சி கூட்டணியுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில்   சிங்மங்களூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் பாஜக  வெற்றிப்பெற்றது. தேர்தல் முடிவடைந்த நிலையில்  பிரசாரத்திற்காக பயன்படுத்திய பிரதமர் மோடி,  பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் எடியூரப்பாவின் கட்-அவுட்களை எடுத்து சென்ற விவசாயிகள் விளை நிலங்களில் பறவைகளை விரட்டுவதற்கு பொம்மையாக பயன்படுத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாநிலத்தில் நெல் பயிரிட விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். இதற்காக விதை நெல் பாவிய இடங்களில் அதனை பாதுகாக்கும் விதமாக கட்-அவுட்களை பயன்படுத்தியுள்ளனர்.

இது பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், கட்சி தலைவர்களின் கட்-அவுட்களை இதுபோன்று பயன்படுத்தக் கூடாது என எந்தஒரு கட்டுப்பாடும் கிடையாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.