இந்திய கப்பற்படைக்கு சொந்தமான கப்பலை சொகுசு பயணம் மேற்கொள்ள பயன்படுத்தியவர் என்று மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சனம் செய்தார். “ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவருடைய இறுதிகாலத்தில் ஊழலில் நம்பர் ஒன்னாக இருந்தார்” என்று குற்றம் சாட்டி பேசினார். ரஃபேல் விவகாரத்தில் மோடியை ராகுல் விமர்சிப்பதால், அதற்கு பதிலடியாக ராகுலின் தந்தையான ராஜீவ் காந்தி மீது மோடி குற்றம் சாட்டி பேசினார்.


பிரதமரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும்  எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு பதில் அளித்த ராகுல், “போர் முடிந்துவிட்டது. உங்களுக்காக நீங்கள் செய்த கர்மா காத்திருக்கிறது” என்று ட்விட்டரில் விமர்சனம் செய்தார். ராஜீவ் மீதான குற்றச்சாட்டு பற்றி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் கூறியது. இந்நிலையில் டெல்லியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, மீண்டும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது குற்றம் சாட்டி பேசினார்.


“ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தனித் தீவுக்கு குடும்பத்தினருடன் சொகுசு பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணத்துக்கு இந்திய கப்பற் படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விராட் கப்பலை ராஜீவ் காந்தி பயன்படுத்தினார்.  தன் சொந்த பயணத்துக்கு ஒரு ஆட்டோவை போல கப்பலை 10 நாட்களுக்கு ராஜீவ் காந்தி பயன்படுத்தினார்.  அந்தக் கப்பலில் வெளிநாட்டவர்களும்  அனுமதிக்கப்பட்டார்கள். இந்தத் தேர்தலுக்கு பிறகு ராஜீவ் காந்தி குடும்பத்தின் வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும்.” என்று மோடி பேசினார்.