பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டவர் ரவீந்திரநாத். இவர் துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் மகன் ஆவார். தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் ஆதரித்து பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து தேனி வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு சென்றார். 

இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தனது குடும்பத்துடன் காசி சென்றுள்ளார். ஆன்மிக பயணமாக வைகாசி சென்றுள்ளதாக ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் அது ஒருபுறமிருக்க உண்மையில் ஓபிஎஸ் வாரணாசி சென்றது பிரதமர் மோடிக்கான தேர்தல் பணிகளில் ஈடுபட தான் என்கிற தகவல் நேற்று தெரியவந்தது. மற்ற அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் தேர்தல் பணிகளில் தமிழகம் அதிலும் குறிப்பாக அதிமுக சிறப்பாக செயல்படுவதால் அக்கட்சியின் அனுபவம் வாய்ந்த ஓபிஎஸ்சை வாரணாசிக்கு பாஜக மேலிடமே அழைத்திருந்தது. 

இதனை ஏற்று வாரணாசி சென்ற ஓபிஎஸ் அங்கு தனது மகன் ரவீந்திரநாத் பாஜக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து விட்டு சிறப்பு பூஜை யாகத்தில் தீவிரம் காட்டி வருகிறார். அதேசமயம் ரவீந்திரநாத் குமார் வாரணாசியில் பிரதமர் மோடியை வெற்றிபெற வைப்பதற்கான வேளையில் களமிறங்கியுள்ளார். அங்கு தன்னை தேர்தல் எக்ஸ்பர்ட் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் ரவீந்திரநாத் குமார் பாஜகவின் மேலிடத் தலைவர்கள் நேரடியாக தன்னுடைய தொடர்புக்கு வந்துள்ளதால் மிகுந்த ஆர்வத்துடன் பணியில் ஈடுபட்டுள்ளார். 

தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் பணிகளில் ஓபிஎஸ்க்கு இருக்கும் அனுபவம் அவரது மகன் ரவீந்திரநாத் குமாருக்கும் இருக்கிறது. இருந்தாலும் இந்த அனுபவம் தமிழகத்திற்கு சற்றும் தொடர்பில்லாத வாரணாசியில் எடுபடுமா என்பது பிறகு தான் தெரியும்.