தயவுசெய்து நிப்பாட்டுங்க.. கொரோனாவை பரப்ப வழி பண்ணாதீங்க.. ஸ்டாலின் உத்தரவுக்கு கார்த்தி சிதம்பரம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இரு நாட்களுக்கு கட்டுப்பாடின்றி பேருந்துகளை இயக்குவது நகரப் பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு கொரோனாவை விரைவாக பரப்ப வழி செய்துவிடும் என சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஊரடங்கு எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. சாலைகளில் வழக்கம்போல பொதுமக்கள் சென்றுவந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் மே 24 முதல் 31 வரை மிகக் கடுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி இன்றும் நாளையும் கடைகளை காலை முதல் இரவு வரைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
பேருந்துகள் இயக்கப்படுவதற்குப் பலரும் சமூக ஊடங்களில் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையே சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இரு நாட்களுக்கு கட்டுப்பாடின்றி பேருந்துகளை இயக்குவது நகரப் பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு கொரோனாவை விரைவாக பரப்ப வழி செய்துவிடும். தயவு செய்து முதல்வர் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.