தமிழகத்தில், 2021ம் ஆண்டில் நடக்கும், சட்டசபை தேர்தலுக்கு முன், புதிய கட்சி தொடங்கி, தீவிர அரசியலில் ஈடுபட ரஜினி திட்டமிட்டுள்ளார். அதற்காக, தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் மக்களவைத் தேர்தல், சட்டசபை தேர்தல் வெற்றிக்கு வியூகம் அமைத்து தருவதில், அகில இந்திய அளவில் பிரபலமானவர், பிரசாந்த் கிஷோர். இவர் தலைமையில் உள்ள நிறுவனம், பல கட்சிகளுக்கு, தேர்தல் வியூகங்களை வகுத்து தந்துள்ளது.

கடந்த, 2014 மக்களவைத்  தேர்தலில், மத்தியில், பிரதமர் மோடி ஆட்சி அமைக்கவும், பீஹாரில், முதலமைச்சர்  நிதிஷ்குமார் ஆட்சி அமைவதற்கும், பிரசாந்த் கிஷோர் காரணமாக இருந்தார். 

அண்மையில்  நடந்த, ஆந்திர சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற, இவர் தான் பின்னணியில் இருந்தார்.

இதையடுத்து வரும், 2021ம் ஆண்டு, சட்டசபை தேர்தலுக்கு வியூகம் அமைக்க, பிரசாந்த் கிஷோரை, தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சி தலைவர்கள் அணுகியுள்ளனர். குறிப்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின்  நிறுவனர் நடிகர் கமல் ஆகியோர், ஏற்கனவே, பிரசாந்த் கிஷோரிடம் பேச்சு நடத்தி உள்ளனர். 

இந்நிலையில், அண்மையில்  மும்பையில், நடிகர் ரஜினியும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து பேசியுள்ளனர். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், அ.தி.மு.க., - தி.மு.க., தலைமைக்கு உள்ள செல்வாக்கு குறித்தும், இருவரும் விவாதித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர் தரப்பினர் எடுத்துள்ள, சர்வே குறித்தும் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது.