சமூக ஆர்வலரான பியூஷ் மானுஸை சேலம் பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் செருப்பு மாலை போட்டு தர்ம அடி கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், ஃபேஸ்புக்கில் லைவ் அடித்தபடி காஷ்மீர் விவகாரம் குறித்து இப்போது  பாஜகவினரிடம் கேட்கலாம் என்றபடி உள்ளே நுழைந்தார். அப்போது பாஜக தொண்டர்களிடம் சென்ற அவர் மணிகண்டன் என்பவர் மெசேஜ்களில் எனக்கு அரிவாளையும், கத்தியையும் அனுப்புகிறார். அவருக்கு என்ன தேவை? காஷ்மீர் பிரச்னை குறித்து விளக்கமளியுங்கள்? எனக் கேட்கிறார். அதற்கு உனக்கு எதற்கு பதில் அளிக்க வேண்டும் என பாஜகவினர் கேட்க, ‘நீங்கள் தான் ஆளும் கட்சியாக இருக்கிறீர்கள்? பதில், சொல்லியே ஆக வேண்டும்? என பியூஷ் மானுஷ் கேட்கிறார். பப்ளிக் கேள்வி கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்? 

சேலத்தில் உள்ள குளங்களையெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறார் என பியூஷ் மீது கோபப்பட்டனர். நீ ராஜஸ்தானில் இருந்து வந்த வந்தேறி. உனக்கு எப்படி வருமானம் வந்தது? எனக் கேட்கின்றனர். அதற்கு பதிலளித்த பியூஷ் மானுஷ். நான் ராஜஸ்தானில் இருந்து வந்தாலும் நான் பிறந்தது இங்கு தான். நான் விவசாயம் செய்து சம்பாதிக்கிறேன். நான் வந்தேறி என்றால் மோடி- அமித் ஷா எல்லாம் வந்தேறிகளா? என பியூஷ் மானுஷ் கேள்வி கேட்டார். விவாதம் அப்ப்டியே இருவருக்கும் முற்ற ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பாஜக தொண்டர்கள் பியூஷ் மானுஷுக்கு செருப்பு மாலை அணிவித்து வெறுப்பேற்றினர். 

மேலும் பியூஷ் மானுஷ் தொடர்ந்து பேசிக்கொண்டே போக வெறுப்படைந்த பாஜக தொண்டர்கள் ஒன்று கூடி அடிக்கத் தொடங்கினர். பின்னர் காவல்துறையினர் வந்து பியூஷ் மானுஷை மீட்டுச் சென்றனர்.