பா.ம.க.வுடனான தொகுதி பங்கீட்டை வெளிப்படையாக அறிவித்ததன் மூலம் தமிழகத்தில் தேர்தல் சரவெடிக்கு செமத்தியாக திரிகிள்ளிவிட்டிருக்கிறது அ.தி.மு.க. அதிரிபுதிரியாக வெடிக்கவும் துவங்கிவிட்டது பரபரப்பு. 

நேற்று காலையில் அ.தி.மு.க. - பா.ம.க. பரபரப்பென்றால் மாலையில் விஜயகாந்த் வீட்டுக்கு பி.ஜே.பி.யினர் படையெடுத்து சென்றதன் மூலம் உருவான பரபரப்பு அடுத்த ஹைலைட். ஆனால் பா.ம.க.வுடனான அ.தி.மு.க.வின் டீலிங்கோ வெகு சுகமாக முடிந்தது. ஆனால் தே.மு.தி.க.வுடனான பி.ஜே.பி.யின் டீலிங்கோ எரிச்சல், ஏமாற்றம், வருத்தம், கடுப்புடன் இழுத்திருக்கிறது.  

தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளர் விஜயகாந்தை அவரது வீட்டில் நேற்று மத்தியமைச்சர் பியூஸ் கோயல் சந்திக்க சென்றபோது தமிழிசை, முரளிதர் ராவ் ஆகியோரும் உடன் சென்றனர். தங்களை வரவேற்று உட்கார வைத்து பெரியளவில் அரசியல் பேசுவார் விஜயகாந்த் என்று நினைத்தார் கோயல். ஆனால் அங்கே போனதும் அவருக்கு டோட்டலாய் பியூஸ் போய்விட்டது. 

காரணம்?...மிக மிக டல்லாக பரிதாபமான முகபாவத்துடன், சிறு குழந்தைபோல் எல்லோரையும் வேடிக்கை பார்த்தபடி கேப்டன் அமர்ந்திருந்ததுதான். டெல்லி பி.ஜே.பி.யினரை அவரால் அடையாளம் காண முடியவில்லை என்பதை கூட ஜீரணித்துக் கொள்ளலாம் ஆனால் தமிழக பி.ஜே.பி.யினரையும் அவரால் குறிப்பிட்டு அடையாளம் காண முடியவில்லையாம். பிரேமலதா, சுதீஷ் இருவராலும் தலைவர்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றனர். அப்போதும் கூட பொத்தாம் பொதுவாகத்தான் சிரித்துக் கொண்டாராம் கேப்டன். உள்ளார்ந்து எதையும் அவரால் உணரமுடியவில்லை யாம். 

பியூஸ் கோயல் கையெடுத்து வணங்கியபோது கூட விஜயகாந்தால் கைகூப்பி சரியாக வணங்க கூட முடியவில்லை என்பதுதான் பெரிய வருத்தமே! என்று விம்முகிறார்கள் தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகிகள். கூட்டணி விஷயங்களை ஃபார்மலாக பேசிமுடித்துவிட்டு கிளம்பிய பியூஸ் கோயல், முரளிதர்ராவிடம் பல விஷயங்களைச் சொல்லி அதிருப்தி காட்டியிருக்கிறார். 

பிறகு இரவில் சுதீஷின் லைனுக்கு வந்த ராவ்...”பாவம் சகோதரர் விஜயகாந்த் இவ்வளவு டல்லா இருக்காரு!  அவரால் எப்படி இவ்வளவு சிரமங்களுக்கு நடுவுல தேர்தல் பணியை நிர்வகிக்க முடியும்? நாங்க அவரை எப்படியோ நினைச்சுட்டு வந்து, இப்படி இருந்ததும் ரொம்ப வருத்தமாகிடுச்சு. அவரு அமெரிக்காவில் சிகிச்சையில் பூரண நலமடைஞ்சுட்டார்னு உங்க கட்சியில அறிக்கை கொடுத்தீங்களே?...அது பொய்யா! 

தேர்தல் கூட்டணி சம்பிரதாயங்கள் நிறைவேறணும்னா விஜயகாந்த்  தமிழ்நாட்டில் இருக்கணும் அப்படிங்கிறதுக்காக அவசர கதியில கூட்டிட்டு வந்துட்டீங்களா? பிரசாரம், கூட்டணி ஆலோசனைன்னு அவரால் எதிலும் வந்து செயல்பட முடியாது பாவம். அரசியலை விட்டுட்டு யோசிங்க, உங்க செயல் சரிதானா?” என்று கேப்டன் எனும் சக மனிதர் மீது அக்கறை பொங்க, நறுக் வார்த்தைகளில் விளாசிவிட்டாராம். சுதீஷால் வாயே திறக்கமுடியவில்லையாம். பாவம், அவரும் என்னதான் பண்ணுவார்!? எல்லாமே இங்கே அரசியல்தான்.