அதிமுக - பாஜக கூட்டணிக்கு தேமுதிக கூட்டணிக்கு வருமா? என்ற கேள்விக்கு' ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த வண்டலூரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் நிறுத்த வேண்டும் என அதிமுக, பாஜக தரப்பில் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் தேமுதிக தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பிரதமர் மோடி வருகை தொடர்பாக முன்னேற்பாடுகளைக் கவனிக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காலை சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது.

பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் தீவிரம் காட்டுகிறோம். தனது அரசின் சாதனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவதைக் கேட்க தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தேமுதிக வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஆச்சரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. அந்த ஆச்சரியத்துக்காக காத்திருக்கிறோம் என்று அவர் பதிலளித்தார்.