petrol bomb at the house of the DMK SelvaGanapathi

அ.தி.மு.க.வுக்கு ஷாக் கொடுக்க ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்க, அவரது கட்சியினரே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்திருப்பது அறிவாலயத்தை அதிர வைத்திருக்கிறது. 

கடந்த 2016 பொது தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்க கைகொடுத்தது ஈரோடு, கோயமுத்தூர், திருப்பூர், சேலம் அடங்கிய மேற்கு தமிழக பகுதிகள்தான். இதனால்தான் இந்த பகுதிகளை தங்களின் கோட்டையாக ஆளுங்கட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது. அதிலும் தற்போது தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி இந்த மண்டலத்தினுள் அடங்கும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவரென்பதால் அக்கட்சியினருக்கு இந்த மண்டலம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 

இந்நிலையில் தங்கள் கட்சி வீக் ஆக இருக்கும் மேற்கு தமிழக பகுதியில் அதை ஸ்ட்ராங் ஆக்குவதற்காக ஸ்டாலின் அடிக்கடி இங்கே விசிட் செல்கிறார். அந்த வகையில் நாளை கோயமுத்தூர் மாவட்டத்தில் கழக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று அங்கே சென்று தங்குகிறார் ஸ்டாலின். இப்படி அடிக்கடி இந்த மண்டலம் வந்து ஸ்டாலின் பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் இந்த பகுதியில் தன் கட்சியை செல்வாக்காக்கி அ.தி.மு.க.வினருக்கு ஷாக் கொடுக்க செயல்தலைவர் திட்டமிட்டிருந்தார். 

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சேலம் குமாரசாமிபட்டி ராம்நகர் பகுதியிலுள்ள மாஜி எம்.பி.யும், ஸ்டாலினின் நெருங்கிய வட்டாரத்திலுள்ள தலைகளில் ஒருவருமான செல்வகணபதியின் வீட்டினுள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. கோவைக்கு கிளம்ப தயாராகியிருக்கும் ஸ்டாலினுக்கு இது ஷாக்கை கொடுத்திருக்கிறது. அதிலும் உட்கட்சி பிரச்னையின் விளைவாகத்தான் இந்த அட்டாக் நிகழ்ந்திருக்கிறது என்பதால் ஸ்டாலின் எக்ஸ்ட்ரா அதிர்ச்சியை அடைந்துள்ளாராம். 
சரி, என்ன உள்கட்சி பிரச்னை அது?...

சேலம் மாவட்ட தி.மு.க.வில் வீரபாண்டியாரின் மகன் ராஜா மற்றும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய இருவரும் தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுகின்றனராம். இதில் செல்வகணபதியின் ஆதரவு வீரபாண்டி ராஜாவுக்காம். இரு தரப்பும் ஆங்காங்கே அடிக்கடி மோதிக்கொள்வது வாடிக்கையாகி இருக்கிறது. 

நேற்று அரிசிப்பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை பணியில் இரண்டு தரப்புமே இறங்கியிருக்கிறது. இதில் ஏரியா தகராறு உருவெடுக்க, நடந்த மோதலில் இருதரப்பிலும் பரஸ்பரம் கத்திக் குத்து விழுந்திருக்கிறது. ராஜேந்திரன் தரப்பில் சுரேஷ், பிரகாஷ் என்பவர்களும் செல்வகணபதி தரப்பில் விநோத்குமார் மற்றும் வரதன் ஆகியோர் காயம்பட்டிருக்கின்றனர். 

இந்த சம்பவத்துக்கு பிறகு இரண்டு தரப்பின் மேல்நிலை நிர்வாகிகளும் போனில் மாறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம். அதன் வெளிப்பாடே செல்வகணபதியின் வீட்டில் இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் நடந்திருக்கிறது என்கிறது விசாரணை செய்யும் அஸ்தம்பட்டி போலீஸ். இந்த தாக்குதலில் ஒரு டூவீலர் மற்றும் கார் எரிந்து சேதமாகி இருக்கிறது. 

செல்வகணபதி சமீபத்தில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை அழைத்து ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினாராம். இதற்கு எதிர்தரப்பினருக்கு முறையான அழைப்புமில்லையாம், மேலும் அந்த கூட்டத்தில் எதிர் முகாம் நிர்வாகிகளை பற்றி ஓவர் டேமேஜிங்காக சில வர்ணனைகளும் வந்து விழுந்ததாம். இதுவும் இந்த தாக்குதலுக்கு காரணம் என்கிறார்கள். 

இந்த சம்பவத்துக்குப் பின் ‘முதல்ல ஸ்டாலின் தன் கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கட்டும். அப்புறமா ஆட்சியை பிடிக்கிறதை பற்றி யோசிக்கலாம்!’ என்று நக்கலடிக்கிறது மேற்கு தமிழக அ.தி.மு.க. 

கோவையில் இன்று இரவு தங்கப்போகும் ஸ்டாலினிடம் இந்த பஞ்சாயத்து பெரிய அளவில் கொண்டு சென்று விவாதிக்கப்படும் என்கிறார்கள். 

என்னா செயல்தல உங்காளுங்களே இப்படி உங்களை நோகடிக்கிறாங்களே!?