லேட்டாய் வருவதால் செம்ம லேட்டஸ்டாய் வரும்! என்று எதிர்பார்க்கப்பட்டது தமிழக காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல். ஆனால் வழக்கம்போலவே அரைத்த மாவையே அரைத்து, பல முறை நின்று தோற்ற சீனியர் வேட்பாளர்களுக்கே கொடுத்து, இளம் கதர் தொண்டர்களை கதறவிட்டிருக்கின்றது தலைமை. 

‘பல முறை பதவி சுகத்தை அனுபவிச்ச பழைய ஆளுங்களுக்கே திரும்பத் திரும்ப கொடுத்துட்டு இருந்தால், நாங்களெல்லாம் எப்பதான் வளர்றது?’ என்று இளம் காங்கிரஸ் நிர்வாகிகள் கடுப்பில் கத்திக் கொண்டிருக்கும் வேளையில், ‘என்னை ஏன் மறந்தீர்கள்? எனக்கு ஏன் வாய்ப்பில்லை?’ என்று சீட் கிடைக்காத சீனியர்களும் சவுண்டு விடுவதுதான் காமெடியே. 

இவர்களில் முக்கியமானவர் பீட்டர் அல்போன்ஸ். த.மா.கா.வுக்கு போயிட்டு போயிட்டு வந்ததே இவருக்கு சீட் இல்லாமல் ஏமாற்றப்பட்டதுக்கு காரணம்! என்று பொதுவான விமர்சனம் வைக்கப்பட, கொதித்துக் கொந்தளித்துவிட்டார் பீட்டரு. இதைத்தொடர்ந்து அவர் குமுறி கொட்டியிருக்கும் கொதி ஸ்டேட்மெண்டுகளின் ஹைலைட்ஸ் இதோ....

* நான் கிறுத்தவன் என்பதால் மாநில தலைவர் பதவிக்கும், வேட்பாளர் வாய்ப்புக்கும் ஒதுக்கப்படுவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அதை கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும்தான். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மதச்சிறுபான்மையினர் யாருமே தமிழக காங்கிரஸின் தலைவர் பதவியில் ஒரு முறை கூட அமர்த்தப்படவில்லையே! இப்போதெல்லாம் அரசியலென்பது மதம் சார்ந்ததாக மாறி வருவதால் நானெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

* இப்போது வாய்ப்பு கிடைத்துள்ள பத்து பேரில் ஒருவர் கூட கிறுத்தவரோ, இஸ்லாமியரோ இல்லை. இது துரதிர்ஷ்டவசமானது. 

* திருநெல்வேலி தொகுதியில்  போட்டியிட விரும்பி விண்ணப்பித்தேன். ஆனால் அந்த தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்படவில்லை. எனவே என்னை கன்னியாகுமரியை கேட்கும்படி சிலர் வர்புறுத்தினார்கள். ஆனால் சுயநல அரிப்புக்காக தேர்தலில் போட்டியிட முயல்பவனில்லை நான். மக்கள் சேவைக்காக வர நினைப்பவன். ஒருவேளை நான் கன்னியாகுமரியில் நின்று, வென்றாலுமே கூட தொடர்ந்து அங்கே பணியாற்றுவது சாத்தியமில்லை. 

* நான் த.மா.கா.வுக்கு சென்று வந்ததால் எனக்கு சீட் மறுக்கப்படுகிறது! என்கின்றனர் சிலர். காமராஜர், கக்கன், மூப்பனார், குமரி அனந்தன், இளங்கோவன் என பல தலைவர்கள் காங்கிரஸுடன் வேறுபட்டு பிரிந்து சென்றார்கள். பின் மீண்டும் இணைந்தனர். அவர்களுக்கெல்லாம் சீட் தரப்பட்ட, தரப்பட்டிருக்கிற கதை நாடறியும். நானென்ன பி.ஜே.பி.க்கோ அல்லது அ.தி.மு.க.வுக்கா போனேன்? அங்கே போய் வந்தவர்களுக்கு கூட சீட் கிடைத்துள்ளது. (திருநாவுக்கரசருக்கு பஞ்ச்) ஆனால் எனக்கு இல்லை. 

* வேட்பாளர் பட்டியலை தாமதப்படுத்தி வெளியிடுகிறது தலைமை. இது தவறு. பதினைந்து நாட்கள் இருக்கும் பிரசாரத்தில் குறைந்தது பத்து லட்சம் மக்களை சந்திக்க வேண்டும். லேட்டாய் வெளியிட்டால் இது எப்படி சாத்தியம்? மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்தில் சில படிகள் முன்னேறி போய்விடுகின்றனர் இதனால். இந்த பிரச்னையை புரிந்து கொண்டு இனி வரும் தேர்தல்களிலாவது தலைமை திருந்த வேண்டும். ...............என நீள்கிறது பீட்டரின் அங்கலாய்ப்பு. 

சீட் இல்லாமல் ஏமாந்த வெறுப்பில் இருக்கும் பீட்டர், அநேகமாக தி.மு.க.வில் ஐக்கியமாக விரும்புகிறார், ஆனால் கூட்டணிக்குள் குழப்பம் வேண்டாம், தேர்தல் முடியும் வரை பொறுத்திருங்கள்! என்று ஸ்டாலின் தடுத்திருக்கிறதாக சொல்கின்றனர் விமர்சகர்கள். 

இதற்கு காரணமாக...”பீட்டர் தன் பேட்டிகளில் தி.மு.க.வை ஓவராய் தாங்கி பேசுகிறார். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதமாக தி.மு.க.வே முக்கிய காரணம் என சொல்லப்படுவதை வன்மையாக பீட்டர் கண்டிப்பதும்! த.மா.கா.வில் இருந்து பலர் அ.தி.மு.க. சென்றபோது தான் நினைத்திருந்தால் தி.மு.க. சென்றிருக்கலாம்! எனது தேவை காங்கிரஸ் கட்சிக்கு தேவை இல்லை போல் தெரிகிறது! என்றெல்லாம் பேசியிருப்பதை கவனியுங்கள்.” என்கிறார்கள். ஆக....இன்றைக்கு மனவருத்தத்தில் இருக்கும் பீட்டரின் கை, கூடிய விரைவில் சூரியனை வணங்கினால் ஆச்சரியமில்லை. இதை நாங்கள் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்லவில்லை.