periyakulam mla kathirkamu opp to ttv
அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அறிவித்த புதிய கட்சி பொறுப்பு தனக்கு வேண்டாம் என பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமு மறுத்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கும், டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 19 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கட்சி நிர்வாகிகள் பதவிகளை டி.டி.வி.தினகரன் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் பதவி அறிவிக்கப்பட்ட பண்ருட்டி எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம், தனக்கு தினகரன் அறிவித்த பதவி வேண்டாம் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து திருப்பெரும்புதூர் எம்எல்ஏ பழனி, ஏ.கே.போஸ் எம்எல்ஏ ஆகியோரும் தங்களுக்கு தினகரன் அளித்த கட்சிப் பொறுப்பு தேவையில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே இயங்க விரும்புவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ கதிர்காமுவும் தினகரன் அளித்த கட்சிப் பொறுப்பு தேவையில்லை என தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட கதிர்காமு, அவரது தலைமையையே தான் விரும்புவதாக கூறினார். தொடர்ந்து 4 எம்எல்ஏக்கள் டி.டி.வி.தினகரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
