கடந்த இரண்டு மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளன் இன்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

 
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் ஃபயஸ் ஆகிய 7 பேர் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் இருந்துவருகிறார்கள். தற்போதுதான் அவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டுவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேரறிவாளன் இரு மாதங்கள் பரோல் லீவில் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை உடல் நிலை பாதிக்கப்பட்டதாலும், தங்கை மகளின் திருமண விழாவில் பங்கேற்கவும் பேரறிவாளனுக்கு பரோல் கோரி அவருடைய தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார்.

 
இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. பின்னர் பரோல் விடுப்பு மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டது. தந்து தங்கை மகளின் திருமணத்தில் பங்கேற்று பறை இசைத்து பேரறிவாளர்ன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.  இந்நிலையில் 2 மாதகால பரோல் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இதனையத்து பேரறிவாளன் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். பேரறிவாளனை கண்ணீர் மல்க அவருடைய குடும்பத்தினர் அனுப்பி வைத்தனர். 
பின்னர் செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் பேசுகையில், “எந்தக் குற்றமும் செய்யாமல் என் மகன் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறான். இந்த ஆண்டாவது எங்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவான் என நினைத்தோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உங்கள் மகன் உங்களிடம் திரும்புவார் என உறுதியளித்தார். அந்த நம்பிக்கையில்தான் இப்போதும் என் மகனின் விடுதலைக்காக காத்திருக்கிறேன். தற்போது என் மகன் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்வது வேதனையாக உள்ளது. என் மகன் விரைவில் விடுதலையாக் வேண்டும். என்னுடைய கடைசி காலத்திலாவது என்னுடன் இருக்க வேண்டும்” என்று அற்புதம்மாள் உருக்கமாக தெரிவித்தார்.