டி.டிவி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தலுக்குத் தயாராகிவரும் தொகுதிகளில் முக்கியமானது சென்னைக்குட்பட்ட பெரம்பூர் தொகுதி. 

அ.தி.மு.க.சார்பில் சசிகலாவால் பரிந்துரைக்கப்பட்டு ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்டவர் வெற்றிவேல். தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சியின் வேட்பாளர் என்.ஆர். தனபாலனை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சென்னையைப்பொறுத்தவரை புறநகர்ப் பகுதியான பூந்தமல்லியைத் தவிர  அ.ம.மு.க. வசமிருந்த ஒரே தொகுதி இந்த பெரம்பூர்தான். அதிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பேட்டிகள் மட்டுமின்றி எதிரிகளை பொறிவைத்து சிக்கவைப்பதில் வல்லவரான வெற்றிவேல் கடைசி நேரத்தில் அடித்துப்பிடித்து வெற்றி பெற்ற தொகுதி இது.

 

ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர், ஜெயக்குமாரின் ராயபுரம்,விருகை வி.என்.ரவி வெற்றிபெற்ற விருகம்பாக்கம், மைலாப்பூர் நட்ராஜ்  ஐ.பி.எஸ்., டி.நகர் சத்யா என வெகுசிலரே அ.தி.மு.க. சார்பில் கடந்த 2016 தேர்தலின்போது வெற்றிபெற்றனர். அதிலும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிவேலால் ஜெயிக்கமுடிந்தது.

சற்று அசந்திருந்தால் இத்தொகுதி தி.மு.க.வசம் சென்றிருக்கும். இப்படி சிறிய மார்ஜினில் கோட்டைவிட்ட இந்த தொகுதியை எப்படியாவது பிடித்துவிட வேண்டுமென கங்கணம் கட்டியுள்ளதாம் தி.மு.க. இதற்காக வடசென்னைப் பகுதியில் பிரபலமானவராகவும், அதே நேரத்தில் பசையுள்ளவராகவும் உள்ளவரை நிறுத்தவேண்டும் என முடிவெடுத்துள்ளனர். 

தற்போது வட சென்னை தி.மு.க.மாவட்ட செயலாளராக இருக்கும் ஆர்.டி.சேகர்தான் அந்த  பொருத்தமான ஆள் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இதையொட்டி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளையும் ஆர்.டி.சேகர் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அ.திமு.க.வைப்பொறுத்தவரை அக்கட்சியின் சிறுபன்மைப் பிரிவு தலைவரும் வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜே.சி.டி.பிரபாகரனை நிறுத்த திட்டமிட்டுள்ளார்களாம். இவரும் பசையுள்ள பார்ட்டிதான். அதே சமயம் இவரை வைத்து பெரம்பூர் பகுதியில் பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவர்களின் வாக்குகளை கவர்வதுதான் அ.தி,.மு.கவின் திட்டமாம். 

எது எப்படியோ பெரம்பூரில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது. இவர்கள் மட்டுமின்றி தற்போது பதவி இழந்துள்ள அ.ம.மு.க.வின் வெற்றிவேலும் இங்கு களத்தில் குதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.