பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தர் சத்யா. பெரம்பலூர் பகுதியில் 3 இடங்களில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், செல்வக்குமாருக்கும், சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழிலை விரிவுபடுத்துவதாகக் கூறி, சத்யா செல்வக்குமாரிடம் ரூ.20 லட்சம் கடனாகப் பெற்றதாகவும், நீண்ட நாளாகியும் அதனை திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

கடந்த மாதம் 17ம் தேதி பியூட்டி பார்லருக்கு சென்று, தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டுள்ளார். இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த செல்வக்குமார், சத்யாவை கடுமையாகத் தாக்கினார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வக்குமாரை கைது செய்தனர். மேலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால், அவரை செல்வக்குமாரை அடிப்படை பொறுப்பில் இருந்துநீக்கப்பட்டார். 

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட திமுகவினர் Asianet Tamil இணைய செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், மன குமுறலுடன் கூறியதாவது. செல்வக்குமார் கட்சிக்காக உழைத்தவர். கடந்தமுறை முன்னாள் கவுன்சிலராக இருந்தார். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடந்தால், அவருக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்பு இருந்தது. இதனால், தங்களுக்கு சீட் வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியில் கட்சியினர் சிலர், தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டு அவரை கட்சியில் இருந்து நீக்க செய்துவிட்டனர்.

பியூட்டி பார்லர் நடத்தும் சத்யாவுக்கும், செல்வக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில் இருவரும் நெருக்கமானார்கள். இதில், சத்யாவுக்கு நிறைய பண வசதிகள் செய்து கொடுத்தார். கடந்த சில மாதமாக கருணாநிதி உடல்நலக்குறைவு, மறைவு, மு.க.ஸ்டாலின் பதவியேற்பு உள்ளிட்ட கட்சி வேலைகளில் அவர் ஈடுபட்டதாமல், சத்யாவை சரிவர தொடர்பு கொள்ளவில்லை. இதனால், அவருக்கு வேறு சிலருடன் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்ததும், ஆத்திரமடைந்த செல்வக்குமார் அவரை தட்டிக் கேட்டார். இதில், வாக்குவாதம் அதிகமானதால் அவரை தாக்கினார். 

இந்த சம்பவம் கடந்த மே மாதம் நடந்தது. ஆனால், தேர்தலில் சீட் வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியில் கட்சியினர் சிலர், அந்த வீடியோ கடந்த 15 நாட்களுக்கு முன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பினர். அதை பார்த்த அவர், முன்னாள் அமைச்சர் ராசாவை அழைத்து கண்டித்துள்ளார். இதையடுத்து ராசா பெரம்பலூர் வந்து கட்சியினரை கண்டித்ததுடன், எச்சரித்தார். எந்த பிரச்சனையாக இருந்தாலும், என்னிடம் தெரிவிக்க வேண்டியதுதானே. ஏன் மு.க.ஸ்டாலினிடம் புகார் அளித்தீர்கள். இதுபோல் இனி நடக்க கூடாது என கூறினார். இதனால், இந்த சம்பவம் புஸ்வானமாகிவிட்டது.

 

மு.க.ஸ்டாலினிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கட்சியினர் தனியார் தொலைக்காட்சிக்கு இந்த வீடியோவை அனுப்பிவிட்டனர். குறிப்பாக இதுதொடர்பாக யாரும், எந்த புகாரும் போலீசில் கொடுக்கவில்லை. இந்த வீடியோவை பார்க்கும் மாதர் சங்கத்தினர், பிரச்சனை செய்வார்கள் என கருதி, காவல்துறை உயர் அதிகாரிகள் செல்வகுமாரை கைது செய்தனர் என கூறினர்.